எது நேர்ந்தாலும் எரிமலைச் சிகரங்களை நாடும் மலையேறிகள்

எது நேர்ந்தாலும் எரிமலைச் சிகரங்களை நாடும் மலையேறிகள்

2 mins read
பலநாள்கள் பயிற்சிபெற்றதால் திட்டங்களைக் கைவிடாத மலையேறிகள்
c15c76c1-e4e3-48ba-81b5-e61e544109ed
கிழக்கு ஜாவாவில் உள்ள ராவுங் எரிமலைச் சிகரத்தில் 41 வயது அன்டின் காடிர். அச் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 3,340 மீட்டர் உயரத்தில் உள்ளது. - படம்: அன்டின் கடிர்

இந்தோனீசிய எரிமலையான டுகோனோவில் அண்மையில் நடந்த வெடிப்புக்குப் பிறகும், மலையேறிகள் அந்நாட்டு மலைச்சிகரங்களை அடையும் முயற்சிகளை கைவிட மறுக்கின்றனர்.

டுகோனோ எரிமலையில் நடந்த அந்த இயற்கைச் சீற்றத்தில் இரு சிங்கப்பூரர் உட்பட, மூன்று மலையேறிகள் மரணமடைந்தனர்.

அத்தகு சம்பவம் நிகழ்ந்திருந்தும் 41 வயதான சிங்கப்பூரரான அன்டின் காடிர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 15 & மே 17) மூன்று நாள்கள், பாலித் தீவின் பதுர் எரிமலையில் நடந்த மலையேறும் போட்டியில் கலந்துகொண்டார்.

அந்த எரிமலையும் எந்நேரமும் வெடிக்கக்கூடிய தன்மை உடையதாகும். அப்படி இருந்தும் அந்த மலையேறும் போட்டி அங்கு நடந்தேறியது.

மலையேறிகளுக்கான அப்போட்டியில் ஏழு முதல் அதிகபட்சமாக நூறு கிலோமீட்டர் வரையில் பல தெரிவுகள் போட்டியாளர்களுக்கு அந்த எரிமலையைச் சுற்றி வழங்கப்பட்டன.

ஜாவாவில் உள்ள ராவுங், லொம்பொக்கில் இருக்கும் ரிஞ்ஜானி எரிமலைகளைக் கடந்த சில ஆண்டுகளில் திரு அன்டின் ஏறிமுடித்துள்ளார். கிழக்கு நேப்பாளத்தின் காங் யாட்செ இமாலயச் சிகரத்தையும் அவர் ஏறிக் கடந்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் மலையேறத் தடை விதித்தால் தாம் அவற்றைக் கடைப்பிடித்து, மலையேறுவதைத் தவிர்த்துவிடுவதாக அவர் கூறினார்.

“பாலித் தீவின் அதிகாரிகள், பதுர் எரிமலைப் போட்டியை தடை செய்யவில்லை. எனவே, மற்ற மலையேறிகளுடன் நான் மலை ஏறினேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆபத்து காலத்துக்கும் அவசர மருத்துவ நெருக்கடிக்கும் அதிகாரிகள் திட்டங்கள் வகுத்திருந்ததை தாம் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்பாட்டாளரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்

போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மோசமான காயமடைவோருக்கும், வானிலை மாற்றத்துக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அவர்களின் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்தோனீசியாவின் எரிமலை, புவியியல் இடர் தணிப்பு மையத்தின் உதவியுடன் எரிமலையின் நிலவரத்தையும் அவர்கள் கண்காணித்து வந்தனர் எனவும் குறிப்பிட்டனர்.

திரு அன்டினைப் போன்றே மற்றொரு சிங்கப்பூர் மலையேறியான 35 வயது ஏ.ரஹிம் இவ்வாண்டு இறுதிக்குள் 3,700 மீட்டர் உயரமான ரிஞ்ஜானி எரிமலை உச்சியை அடைய விரும்புகிறார்.

பலநாள்கள் பயிற்சி மேற்கொண்டுவருவதால், டுகோனோ வெடிப்பால் தமது திட்டத்தை ஒத்திவைக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்