வாஷிங்டன்: வடகொரியாவில் காவலில் இருப்பதாக நம்பப்படும் அமெரிக்க ராணுவ வீரர் டிராவிஸ் கிங் குறித்து எந்தத் தகவலும் வெளியிடாமல் வடகொரியா மௌனம் காத்துவருகிறது. வடகொரியாவின் இந்தச் செயல் மிகுந்த வருத்தம் அளிப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்தது.
ஐக்கிய நாட்டுத் தளபத்தியம் மூலமும், மற்றப் பல வழிகளிலும் பியோங்யாங்கைத் தொடர்புகொள்ள தாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த வீரரை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் அமெரிக்க இராணுவச் செயலாளர் கிறிஸ்டின் வோர்முத் தெரிவித்தார்.
மேலும், திரு ஓட்டோ வார்ம்பையரின் வழக்கை மேற்கோள்காட்டி வடகொரியர்கள் திரு கிங்கை எப்படி நடத்துவார்கள் என்று நான் கவலைப்படுகிறேன் எனவும் அவரை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த அமெரிக்க வீரர் ஏன் எல்லையைத் தாண்டி வடகொரியாவிற்குள் சென்றார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இன்னும் புரியாத சூழலில், திருவாட்டி வோர்முத் மட்டும் இராணுவத்திடமிருந்து ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ளப் பயந்து அவர் தப்பிக்கும் நோக்கில் வடகொரியாவிற்குச் சென்றார் என ஒத்துக்கொண்டுள்ளார்.