மண்டேலே: மியன்மாரில் கடந்த மார்ச் மாதம் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தால் மக்கள் துன்பப்படும் நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) ஆயிரக்கணக்கானோர் புத்தாண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் தண்ணீர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
வழக்கமாக மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் ‘திங்யான்’ திருவிழா, அண்மைய நிலநடுக்கப் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு அமைதியான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மியன்மாரின் ராணுவ அரசாங்கம், ஐந்து நாள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வழக்கமான இசை, நடனத்தைத் தவிர்க்குமாறு கட்டளையிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குமுன் மியன்மாரை 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் உலுக்கியதில் 3,600க்கு மேற்பட்டோர் மாண்டுவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
பலரும் கழிவறை வசதி இல்லாமையாலும் குடிநீர்ப் பற்றாக்குறையாலும் அவதிப்படுவதாகக் கூறப்பட்டது.
நிலநடுக்கத்தால் 5,200க்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு மில்லியனுக்கு மேற்பட்டோர் அவதிப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.
இவ்வேளையில் கனத்தமழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வக முன்னுரைப்பு முகாம்களில் தங்கியுள்ளோரின் கவலையை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 5.9 ரிக்டராகப் பதிவானது.
சிங்கப்பூர் நேரப்படி, காலை 10.24 மணிக்கு, மே ஹோங் சன் மாநிலத்திற்கு வடமேற்கே கிட்டத்தட்ட 270 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையங்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
மேலும், பாய் மாவட்டத்தின் தம்போன் மே நா டோயெங் பகுதியில் காலை 9.42 மணிக்கு 1.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.