பயணியின் உணவில் எலி: பாதை மாற்றிவிடப்பட்ட விமானம்

1 mins read
60c1087e-abb0-40c3-8375-0cbd3505b6b5
சம்பவம் ஸ்கேண்டினேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நிகழ்ந்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஓஸ்லோ: ஸ்கேண்டினேவியன் ஏர்லைன்ஸ் (SAS) விமானம் ஒன்றில் பயணிக்கான உணவிலிருந்து எலி வெளிவந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் திட்டமிடாத இடத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது.

நார்வே தலைநகர் ஓஸ்லோவிலிருந்து ஸ்பெயினின் மலாகா நகருக்குச் சென்றுகொண்டிருந்த அந்த பயணிகள் விமானத்தில் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 20) அச்சம்பவம் நிகழ்ந்தது. அதனால் அந்த விமானம் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் எதிர்பாரா விதமாகத் தரையிறங்கியது.

ஸ்கேண்டினேவியன் ஏர்லைன்ஸ் பின்பற்றும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு விமானம் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் மலாகாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளரான ஒய்ஸ்டீன் ‌ஷ்மிட் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற சூழல்களுக்கென சில நடைமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க எங்களின் உணவு விநியோகிப்பாளர்களுடன் மறுபரிசீலனை செய்வதும் அந்த நடைமுறைகளில் அடங்கும்,” என்று திரு ஒய்ஸ்டீன் ‌ஷ்மிட் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்