தோக்கியோ: ஜப்பானில் பொதுமக்கள் வெளிநாட்டு அரிசியை நாடாமல் இருக்க புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது அந்நாட்டு வேளாண் அமைச்சு.
கடைகளில் உள்ளூர் அரிசி தீர்ந்துவிட்டால் அரசாங்க கிடங்கில் இருக்கும் உள்ளூர் அரிசி மூட்டைகளை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள விலையைவிடச் சற்று குறைவான விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி ஜப்பானிய மக்கள் உள்ளூர் அரிசியை வாங்க ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் குறைவான விலையில் விற்கக்கூடிய வெளிநாட்டு அரிசியை ஜப்பானியர்கள் வாங்க மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது.
ஜப்பானில் கடுமையான வெயில் காரணமாக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை ஏற்றம் கண்டது. ஆனால் வெளிநாட்டு அரிசி மலிவு விலையில் கிடைக்கிறது.
மக்கள் மனம் வெளிநாட்டு அரிசிமீது சென்றுவிடக் கூடாது என்பதால் ஜப்பானிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் முதல் அதன் கிடங்கில் உள்ள அரிசி மூட்டைகளை விற்பனைக்கு விட்டு வருகிறது.