ஜோகூர் பாரு: மலேசிய எல்லைகளில் உள்ள குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளின் இயங்குமுறையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காகப் புதிதாக மலேசிய எல்லைக் கட்டுபாடு, பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடிகளின் இயங்குமுறையைத் துரிதப்படுத்தும் பணிகளை சனிக்கிழமையிலிருந்து (பிப்ரவரி 1) ஆணையம் கட்டங்கட்டமாக மேற்கொள்ளும்.
இவ்வாறு நாடெங்கும் உள்ள 114 எல்லைச் சோதனைச்சாவடிகள் அதன் நேரடிக் கண்காணிப்பின்கீழ் வரும்.
முதல் கட்டமாக 22 சோதனைச்சாவடிகளில் ஆணையம் தனது பணிகளைத் தொடங்கும்.
அவற்றில் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜோகூரில் உள்ள இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளும் அடங்கும்.
ஜோகூரில் உள்ள தஞ்சோங் பலேபாஸ் துறைமுகமும் பாசிர் குடாங் துறைமுகமும் அந்த 22 சோதனைச்சாவடிகளில் அடங்கும்.
சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் செயல்பாடு, பங்களிப்பு ஆகியவற்றைப் போலவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் செயல்பாடு, பங்களிப்பு இருக்கும் என்று மலேசியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு, சோதனைச்சாவடி மற்றும் சுல்தான் அபு பக்கர் குடிநுழைவு, சோதனைச்சாவடியின் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஆணையத் தலைவர்களாக மலேசிய சுங்கத்துறையைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சு கூறியது.
சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு, சோதனைச்சாவடியின் மலேசிய எல்லைக் கட்டுபாடு, பாதுகாப்பு ஆணையத் தலைவராக திருவாட்டி ரொசிட்டா டிம்மும் சுல்தான் அபு பக்கர் குடிநுழைவு, சோதனைச்சாவடியின் மலேசிய எல்லைக் கட்டுlப்பாடு, பாதுகாப்பு ஆணையத் தலைவராக திருவாட்டி நூர் ஃபசிலா ஸைனாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவெங்கும் 56 கடல்வழி சோதனைச்சாவடிகள், 30 நிலவழிச் சோதனைச்சாவடிகள், 28 விமான நிலைய சோதனைச்சாவடிகள் ஆகியவை படிப்படியாக ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
சரவாக் மாநிலத்தில் ஆக அதிகமான சோதனைச்சாவடிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 34 சோதனைச்சாவடிகள் உள்ளன.
அதை அடுத்து, ஜோகூரில் 16 சோதனைச்சாவடிகள் இருக்கின்றன.
சாபாவில் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன.
சிங்கப்பூருடனான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுவதால், பல்வேறு அமைப்புகளிடையிலான ஒருங்கிணைப்பு மேம்படும் என்றும் அதன் விளைவாகப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் மலேசிய உள்துறை அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.

