கோலாலம்பூர்: மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமது தொகுதி மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக ‘மாடல் அழகன்’ ஆக மாறியிருக்கிறார்.
அரசாங்கத்திடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் பலனளிக்காததால் தாம் இந்நடவடிக்கையில் இறங்கியதாகச் சொன்னார் சயது சாதிக் சயது அப்துல் ரஹ்மான். உள்ளூர் நவீன ஆடை ஆபரண நிறுவனத்துக்காக அவர் மலாய் பாரம்பரிய உடையில் விளம்பரம் செய்தார்.
ரம்ஜானுக்காக அந்நிறுவனம் வெளியிடும் சிறப்பு ஆடைகளை விளம்பரப்படுத்த முவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு சயது சாதிக், 32, ‘மாடல் அழகன்’ ஆனார்.
“நான் மாடலானதைத் தொடர்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபமடைந்தனர். ஆனால் நான் இதில் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டது,” என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 18) நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் திரு சயது சாதிக் தெரிவித்தார்.
“முவார் தொகுதிக்காக என்னால் ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் (302,000 வெள்ளி) மேல் திரட்ட முடிந்தது,” என்று அவர் கூறினார். அத்தொகையைத் தாம் ரொக்கமாகப் பெறவில்லை என்றும் தமது தொகுதி மக்களுக்கான பொருளாகப் பெற்றதாகவும் திரு சயது சாதிக் குறிப்பிட்டார்.

