தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனிய அமைதிப் பேச்சுவார்த்தையில் புட்டின் கலந்துகொள்ளவில்லை

2 mins read
8bba446f-6f05-4788-a546-a4e977b084bd
நிபந்தனையற்ற நேரடி கலந்துரையாடலுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்புவிடுத்தார் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். - படம்: ராய்ட்டர்ஸ்

உக்ரேன் போர் தொடர்பாக இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் செல்வோரின் பட்டியலில் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் பெயர் இல்லை. மாறாக அதிபருக்கான உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி ர‌ஷ்யப் பேராளர்களுக்குத் தலைமைத்தாங்குவார் என்று கிரெம்ளின் அறிக்கை குறிப்பிட்டது.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ர‌ஷ்ய அதிபர் ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு திரு புட்டினை நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக இதற்குமுன் கூறினார். நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுவதை உறுதிசெய்ய ஆன அனைத்தையும் செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பேச்சுவார்த்தைக்குச் செல்லவில்லை என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவானைத் துருக்கித் தலைநகர் அங்காராவில் வியாழக்கிழமை சந்திக்கிறார்.

திரு புட்டின் கலந்துகொண்டால் மட்டுமே இஸ்தான்புல்லில் ர‌ஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

“ர‌ஷ்யாவிலிருந்து யார் வருகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பேன். அதையடுத்து உக்ரேனின் அடுத்து அடி என்ன என்பதை முடிவுசெய்வேன்,” என்றார் அவர்.

2019ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பின் திரு புட்டினும் திரு ஸெலென்ஸ்கியும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. கடைசியாக 2022 மார்ச் மாதம் இஸ்தான்புல்லில் ர‌ஷ்யாவும் உக்ரேனும் சமரசப் பேச்சில் ஈடுபட்டன.

நிபந்தனையற்ற ர‌ஷ்ய-உக்ரேன் கலந்துரையாடலுக்குத் திரு புட்டின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். அதில் நேரடியாகக் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவித்த திரு ஸெலென்ஸ்கி, ர‌ஷ்ய அதிபரும் அவ்வாறே செய்வார் என்று எதிர்பார்த்தார்.

ர‌ஷ்யாவும் உக்ரேனும் ஏறக்குறைய உடன்பாட்டை எட்டும் நிலையில் இருப்பதாக இதற்குமுன் திரு டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்