கோலாலம்பூர்: வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) 100 மில்லியனாவது மரத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தாமான் ஹெர்பாவில் நட்டார்.
அப்போது பிரதமரின் மனைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
மலேசியாவின் தேசிய ‘மெர்பாவ்’ மரத்தின் கன்றை திரு அன்வார் நட்டார்.
ஐந்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் 100 மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மலேசியா கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது. 2025ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய வேண்டும்.
ஆனால், இவ்வாண்டிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
2021 ஜனவரி 5ஆம் தேதி மரக்கன்று நடும் பிரசார இயக்கம் தொடங்கியபோது மலேசிய கூட்டரசின் வனத்துறை, சரவாக் வனத்துறை, சாபா வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதற்கு ஒத்துழைப்பு அளித்தன.
பிரசாரத் திட்ட காலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாடு முழுவதும் நடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
18 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை மலேசியா அடைந்து சாதித்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 54.58 விழுக்காடு ஆகும்.
மரக்கன்று நடும் திட்டம் உயிரியல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதோடு பருவநிலை மாற்ற தாக்கங்களை தணிக்கவும் உதவுவதாக அமைச்சு கூறியது.