மலேசியாவில் வேலை பளு அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்திற்குள்ளான 41 வயது ஆடவர் காட்டிற்குள் சென்று வாழமுடிவெடுத்தார்.
காட்டிற்குள் தொலைந்து போன அவர் 6 நாள்களுக்குப் பிறகு உதவிகேட்டு அதிகாரிகளை அழைத்துள்ளார். அதன் பிறகு மலேசிய தீயணைப்புப்படை வீரர்கள் அவரை மீட்டனர்.
ஆடவரின் பெயரை மலேசிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஜூன் 9ஆம் தேதி இரவு 11:44 மணிக்கு ஆடவர் உதவி கேட்டு அதிகாரிகளை அழைத்துள்ளார். அவரை மூன்று மணி நேரத்திற்குள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆடவர் ஜூன் 3ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பேருந்து மூலம் அமஞ்சாயா முனையத்திற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் காட்டிற்குள் சென்றுள்ளார்.
ஆறு நாள்கள் காட்டிற்குள் இருந்த அவர், பசி தாங்க முடியாமலும் தொலைந்துபோனதாலும் தமது கைப்பேசியில் இருந்து உதவிகேட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பிறகு தீயணைப்புப்படை அதிகாரிகள் காட்டிற்குள் நுழைந்து அவரை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் ஓராண்டுக்கு முன்னர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் கடந்த சில மாதங்களாக மாத்திரைகள் எடுக்காமல் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆடவரின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும், அவர் ஆறு நாள்கள் உண்ணாமல் இருந்ததால் அவரின் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.