லண்டன்: பிரிட்டனிலும் வேல்ஸிலும் அதிகமான ஆண் குழந்தைகளுக்கு முஹம்மது என பெயர் சூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது.
2023ஆம் ஆண்டில் பிறந்த 4,600க்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு முஹம்மது என்ற பெயர் பதிவு செய்யப்பட்டதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (ONS) தரவுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் புள்ளிவிவர ஆணையத்தின்கீழ் அந்த அலுவலகம் இயங்குகிறது.
அதிகமான ஆண் குழந்தைகளின் பெயரில் ‘நோவா’ என்று இருந்ததை ‘முஹம்மது’ முந்திவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தைகளுக்குச் சூட்டப்படும் முதல் பத்து பெயர்களில் ஒன்றாக முஹம்மது விளங்கி வந்தது. 2022ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தில் இருந்த முஹம்மது கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்தது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டின் ஆண் குழந்தை பெயர்ப் பட்டியலில் முஹம்மது முதலிடத்திலும் நோவா இரண்டாம் இடத்திலும் ஆலிவர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அவற்றில் 4,661 குழந்தைகளுக்கு முஹம்மது என்றும் 4,382 குழந்தைகளுக்கு நோவா என்றும் 3,556 குழந்தைகளுக்கு ஆலிவர் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
அதற்கு முந்திய 2022ஆம் ஆண்டு 4,177 குழந்தைகளுக்கு முஹம்மது என்ற பெயர் பதிவு செய்யப்பட்டது.
முஹம்மது என்ற பெயரை ஒட்டி உச்சரிக்கப்படும் ‘மொஹம்மது’ என்ற பெயரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் முதல் 100 பெயர்களில் ஒன்றாக உள்ளது.