தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பெர்சத்து கட்சியின் தலைவர் பொறுப்பைத் தொடரப்போவதில்லை’

2 mins read
fbed13fb-2944-457c-a139-fed64af654b3
மலேசியாவின் ஷா ஆலமில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற ஆறாவது பெர்சத்து வருடாந்திரப் பொதுச் சபைக் கூட்டத்தில் முகைதீன் யாசின் பேசினார். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் தமது பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

தலைமைத்துவத்தை மற்றொருவரிடம் ஒப்படைக்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் ஷா ஆலமில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற ஆறாவது பெர்சத்து வருடாந்திரப் பொதுச் சபைக் கூட்டத்தில் திரு முகைதீன் பேசினார்.

“பெர்சத்து பொதுச் சபைக் கூட்டத்தில் கட்சித் தலைவராக இங்கு நின்று நான் பேசுவது இதுவே இறுதி முறை,” என்றார் அவர்.

திரு முகைதீனின் அறிவிப்பு சில பேராளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“நமது கட்சி பின்பற்றும் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப, கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள பெர்சத்துத் தலைவர்களுக்கு இடம்கொடுப்பதற்காக இந்த முடிவை எடுத்தேன்,” என்று முன்னாள் பிரதமரான திரு முகைதீன் கூறினார்.

அவர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை மலேசியப் பிரதமராக இருந்தார்.

கட்சியின் புதிய தலைமைத்துவத்தில் அனுபவம்வாய்ந்த உறுப்பினர்களுக்கு இடமும் பதவியும் இருப்பதை உறுதிசெய்ய மூத்த பெர்சத்து தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற யோசனையை பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகைதீன் முன்வைத்தார்.

எதிர்காலத்தில் கட்சியின் வலிமையை மேலும் துல்லியமாக அதிகரிக்க இது முக்கியம் என்று அவர் கூறினார்.

பெர்சத்து உடைந்துவிடாமல் இருப்பதற்காக அந்த யோசனையை முன்வைத்ததாக, பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.

அதே செய்தியாளர் கூட்டத்தில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அகமது ஃபைஸல் அஸுமு, திரு முகைதீனின் அறிவிப்பைக் கேட்டு தாமும் வியப்படைந்ததாகத் தெரிவித்தார்.

திரு முகைதீன் கட்சித் தலைவராகத் தொடரவேண்டும் என்ற விருப்பம் மற்றவர்களுக்கும் உள்ளதாக அவர் கூறினார்.

திரு முகைதீன் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெர்சத்து கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்