கோலாலம்பூர்: வரவிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலில், பெர்சத்துக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் போட்டியிடமாட்டார் என்று பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் ஜோகூர் தலைமையகத் தலைவர் டாக்டர் சாஹ்ருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீன் யாசின் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி போட்டியிடுவது தொடர்பாக இதுவரை எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை,” என்றார்.
கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது காம்பீர் சட்டமன்றத் தொகுதியை முகைதீன் யாசின் பாதுகாக்காமல் விலகியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், மீண்டும் மாநிலத் தேர்தலில் களமிறங்குவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து வந்தது.
எனினும், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பெரிக்கத்தான் நேஷனல் ஜோகூர் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் ஜோகூர் மாநிலத் தேர்தலில் முகைதீன் நேரடியாக போட்டியிடுவார் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

