கோலாலம்பூர்: ‘நிக்ஷேர்’ (Nicshare) மற்றும் ‘காமன்ஆப்ஸ்’ (CommonAps) முதலீட்டு மோசடி தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) தாய்லாந்தின் சொங்க்லாவில் மலேசிய ஆடவர் ஒருவரும் அவருடைய மனைவியும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்மூலம் இந்த முதலீட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவ்விருவருக்கும் மோசடியில் முக்கியத் தொடர்பிருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.
நிக்ஷேர் மோசடி மூலம் மொத்தம் 8.21 மில்லியன் ரிங்கிட்டை (S$2.47 மில்லியன்) இழந்துவிட்டதாக இதுவரை 24 புகார்கள் வந்துள்ளதாகக் காவல்துறை தலைமை ஆய்வாளர் ரசாருதீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
“காமன்ஆப்ஸ் முதலீட்டு மோசடி தொடர்பிலும் இரு புகார்கள் வந்துள்ளன. அம்மோசடியில் 340,079 ரிங்கிட்டை இழந்துவிட்டதாகப் புகார்தாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்,” என்று திரு ஹுசேன் கூறினார்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு அளித்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பலனடைதல் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகள்மீதும் நிறுவனங்கள்மீதும் குற்றஞ்சாட்டுப்பட்டுள்ளதாகத் திரு ரசாருதீன் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் பெரும்பணம் ஈட்டிவிடலாம் என ஆசை காட்டும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்துக் கவனமாக இருக்குமாறும் மோசடி முதலீட்டுக் கும்பலுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, மலேசியர் ஒருவரையும் அவருடைய மனைவியையும் கைதுசெய்ததை அடுத்து, பெரிய மோசடிக் கும்பலை முறியடித்துவிட்டதாக நம்புகிறோம் என்று வியாழக்கிழமையன்று தாய்லாந்துக் காவல்துறை தெரிவித்திருந்தது.

