பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) இரவு ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இருவர் காயமடைந்தனர்.
அந்தத் தீவைப்பு, வெடிகுண்டுத் தாக்குதல்களில் அரசாங்கச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
மொத்தம் 51 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ராணுவத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு செயல்பாட்டுத் தளபத்தியமும் உள்ளூர் ஊடகங்களும் கூறின. உள்ளூர் அரசாங்க அலுவலகக் கட்டடம் ஒன்று, 7-இலெவன் வணிகக் கடை, திருடப்பட்ட வாகனம் ஒன்று முதலியவை தீப்பிடித்து எரிந்தன.
“தெற்கு எல்லையோர வட்டாரங்களின் பல்வேறு இடங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்தன,” என்று தளபத்தியம் அறிக்கையொன்றில் தெரிவித்தது. தாக்குதல்கள் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை நடத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.
பெரும்பாலான தாக்குதல்கள் நராத்திவாட் மாநிலத்தில் நடந்தன. அங்குப் பொதுமக்களில் இருவர் காயமடைந்தனர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது; மற்றத் தாக்குதல்கள் அண்டை மாநிலங்களான யாலாவிலும் பட்டானியிலும் நடந்ததாக அறிக்கை கூறியது.
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு தாய்லாந்து. அதன் தென்கோடியில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் அதிகத் தன்னாட்சி கேட்டுப் போராடி வருகின்றனர். 2004ஆம் ஆண்டிலிருந்து தென்பகுதியில் தொடரும் மோதல்களில் 7,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.


