சிட்னி: கலிஃபோர்னியா காட்டுத்தீயிலிருந்து பார்வையற்ற தமது மகனைக் காப்பாற்ற தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் தீர்ந்ததே இதற்குக் காரணம் என்றார் அவர்.
பெருமூளை வாதத்தாலும் பாதிக்கப்பட்ட தமது 32 வயது மகனான ரோரியைக் காப்பாற்ற தாம் போராடியதாக ஆஸ்திரேலிய ஊடகத்திடம் திருவாட்டி ஷெலி சைக்ஸ் கூறினார்.
காட்டுத்தீயில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக அவரது பாதங்களில் வீக்கம் ஏற்பட்டதாகவும் அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் திருவாட்டி சைக்ஸ் தெரிவித்தார்.
வயிற்றுவலியும் இருந்ததால் கழிவறையைவிட்டு அதிக தூரம் செல்ல தமது மகன் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
எனவே, தாம் வளர்த்து வந்த இரண்டு மயில்கள், தமது மகனுடன் வீட்டில் உள்ள கழிவறையில் இருந்ததாக திருவாட்டி சைக்ஸ் தெவித்தார்.
அப்போது கூரை தீப்பிடித்துக்கொண்டதாகவும் தீயை அணைக்க முற்பட்டபோது குழாய்களிலிருந்து தண்ணீர் வரவில்லை என உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு திருவாட்டி சைக்ஸ் கார் ஓட்டிச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அங்கும் தண்ணீர் இல்லை என்று அவருக்குத் தெரியவந்தது.
தீயணைப்புப் படையினருடன் திருவாட்டி சைக்ஸ் வீடு திரும்பியபோது தமது வீடு சாம்பலாகிவிட்டதைக் கண்டு மீளாத் துயரில் ஆழ்ந்தார்.
கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்ததால் திருவாட்டி சைக்சின் மகன் மாண்டதாகத் தீயணைப்புப் படையினர் கூறினர்.
தமது மகனைக் காப்பாற்ற முடியவில்லையே என்று திருவாட்டி சைக்ஸ் கடும் துயரில் ஆழ்ந்தார்.
தமது கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் தமது மகனைத் தூக்கி பத்திரமான இடத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்றார் அவர்.
காட்டுத்தீ காரணமாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் குறைந்தது 24 பேர் மாண்டுவிட்டனர்.
வீடுகள் பல தீக்கு இரையாகி அழிந்துவிட்டன.
இதற்கிடையே, கலிஃபோர்னியாவை உலுக்கும் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்கத் தீயணைப்புப் படையினருக்கு உதவி செய்ய உக்ரேனியத் தீயணைப்புப் படையினரை அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்காக 150 உக்ரேனியத் தீயணைப்புப் படையினர் தயார்நிலையில் இருப்பதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரேனுக்கு அமெரிக்கா இதுவரை 65 பில்லியன் அமெரிக்க டாலர் (S$89.10 பில்லியன்) பெறுமானமுள்ள ராணுவ உதவிகளை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.