சோல்: தென்கொரியாவில் மகளைத் துன்புறுத்திய குற்றத்திற்காக 50 வயது மதிக்கத்தக்க மாது ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் ஈராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்தை அந்த மாது 2021 டிசம்பர் மாதத்திற்கும் 2022 மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் என டேஜியோன் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.
தொல்லைதரும் குறுஞ்செய்திகள் அனுப்புவது, மனத்தைப் புண்படுத்தும் வகையில் தொலைபேசியில் பேசுவது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைவது போன்றவற்றைச் செய்ததாக அந்த மாதுமீது குற்றம் சுமத்தப்பட்டது.
டேஜியோன் மாவட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த மாது தொல்லைதரும் வகையில் தன் மகளுக்கு 306 குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் 111 முறை தொலைபேசிவழி அழைத்ததாகவும் கூறப்பட்டது.
தன் மகளைப் பைபிள் படிக்கும்படியும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்ற மற்றோர் மகளின் வீட்டில் தங்கும்படியும் அந்த மாது வற்புறுத்தியுள்ளார்.
அவர் அதைச் செய்ய மறுத்ததால், அவருக்கு அம்மாது தொல்லைதரத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
தான் வேண்டுமென்றோ திட்டமிட்டோ எதுவும் செய்யவில்லை என அந்தத் தாய் நீதிமன்றத்தில் வாதிட்டபோதும் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

