பாரம்பரியமும் வர்த்தகமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த பல வண்ணத் திரைச்சீலையைப் போன்ற நேப்பாளத்தின் அழகிய தலைநகரம், தற்போது தலைமுறைகளுக்கு இடையே மோதும் களமாக உள்ளது.
இளையர்களால் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் புரட்சி மட்டுமன்று. பழைய ஏற்பாட்டின் இடித்துரைப்பு. மாற மறுக்கும் பழமைவாதத்திற்கு எதிரான போர்க்கொடி. அரசியல் பதவியில் இருப்பவர்களும் செல்வம் படைத்தவர்களும் தங்கள் பிள்ளைகளையே முதன்மைப்படுத்தும் போக்கின் திட்டவட்ட நிராகரிப்பு.
இளையர்களிடையே வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 20 விழுக்காடு. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் நேப்பாளத்திற்கு அனுப்பும் தொகை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்று தகவல்கள் கூறுகின்றன.
உள்நாட்டில் தொழில்துறை மந்தநிலையும் வேலை வாய்ப்புகளுக்கான பற்றாக்குறையும் இளையர்கள் பலரை அயல்நாடுகளுக்குத் தள்ளிவிட்டது இதன் மூலம் தெரிகிறது.
காட்மாண்டுவின் 35 வயது மேயர் பலேன் ஷா, ‘ஹமீ’ என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் அனில் பனியா, சமூக ஊடகப் படைப்பாளர் சுபானா புளததொகி, மாணவர் பினு சி. கே போன்றோர், சமூக ஊடகங்களின் வழியாக பிற இளையர்களுடன் பிணைப்புகளை ஏற்படுத்தி, இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களாக உருவெடுத்துள்ளனர்.
இருபதுக்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களின் மீது நேப்பாள அரசாங்கம் செப்டம்பர் 4ஆம் தேதி அறிவித்த தடை, ஆர்ப்பாட்டங்களின் ஆரம்ப வித்து.
பதிவுக்கான விதிமுறைகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்பதால் அந்தத் தடையை அறிவித்ததாக அரசாங்கத் தரப்பு கூறியது. ஆனால் இளையர்களோ, இதனை அரசாங்கம் செய்துள்ள ஆக மோசமான மின்னிலக்கத் தணிக்கை என்று கருதுகின்றனர்.
இன்றைய காலத்தின் மின்னிலக்க அடிநாதத்தை, தலைமைத்துவப் பழமைவாதிகள் அறியவில்லை என்கின்றனர் மாற்றத்திற்குக் குரல் கொடுப்பவர்கள். 1996க்கும் 2010க்கும் இடையே பிறந்தவர்கள் எனக் கூறப்படும் ஜென் ஸீ தலைமுறையினர்க்கு சமூக ஊடகங்கள் வகுப்பறைகளைப் போன்றவை.
தொடர்புடைய செய்திகள்
உலகத்தைக் காட்டும் சன்னலாகத் திறன்பேசித் திரைகளை உலகெங்கிலும் உள்ள இளையர்கள் கருதுகையில், நேப்பாளத்திலுள்ள இளையர்கள் அதற்கு விதிவிலக்காக முடியாது.
செப்டம்பர் 8ல் அமைதியுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டம், காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் கலவரமானது. குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதே இரவன்று, அரசாங்கம் தடையை மீட்டுக்கொண்டபோதும் மக்களின் போராட்ட உணர்வைத் தணிக்க முடியவில்லை.
நேப்பாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி, செப்டம்பர் 9ஆம் தேதி பதவி விலகியதை அடுத்து முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி, இடைக்காலப் பிரதமராக வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கமான அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் மக்கள் தற்போது விரும்பவில்லை என்று இந்தத் தெரிவு எடுத்துக் காட்டுகின்றன.
பொருளியல் மந்தநிலைக்கு ஊழல், குறிப்பாக நெடுநாள் அரசியல்வாதிகளுக்கும் பழைய வர்த்தகங்களுக்கும் உள்ள உறவால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலை தீர வேண்டும் என்பது இளம் தலைமுறையினரின் கனவாகும். அடிப்படையில், நேப்பாளம், தகுதிக்கு முக்கியத்தும் தரவேண்டும் என்பதே கோரிக்கை.
வேளாண்மை, சுற்றுப்பயணம் ஆகியவற்றையே சார்ந்திருக்காமல் உற்பத்தித் தொழில்துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதும் இளையர்களின் மற்றோர் விருப்பமாகும். 2000ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு உற்பத்தித் துறை, 9 விழுக்காடு பங்களித்து. ஆனால் இப்போது அதே துறையின் பங்களிப்பு 5 விழுக்காட்டுக்குக் கீழ் சரிந்துள்ளது.
தேவையான தேசிய சீர்திருத்தங்கள் இன்றி, எந்தவிதமான தொழில்துறை முயற்சிகளும் உழைப்புக்கேற்ற பலனைத் தராது. தங்கள் தலைமைத்துவத்தையே காக்க நினைப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசாங்கத் தலைவர்களின் மனதில் புத்தாக்கம், எட்டாக்கனியாகத்தான் இருக்கும்.
ஆனால், நீண்ட நாள் அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க போராட்டங்கள் போதா. ஒன்றுபட்ட கொள்கைகளும் உத்திபூர்வ திட்டமிடுதலும் புதிய அதிகார கட்டமைப்பும் தேவைப்படுகின்றன.
இளையர்களிடையே திறனும் நம்பகத்தன்மையும் கொண்டுள்ள தலைவர்களுக்கு இத்தகைய உருமாற்றங்கள் ஏற்படாவிடில் சீர்திருத்தவாதிகள் முறியடிக்க விரும்பும் தரப்பினர் மீண்டும் மாற்று உருவில் வந்து தலைமைத்துவத்தைப் பற்றும் அபாயம் உள்ளது.