முரசுக்களம்: தலிபானுடன் இணங்கி ஆதாயம் தேடும் இந்தியா

2 mins read
53d0dd73-0356-48d2-b5a4-25f4312fce6b
உலகச் சூழல் எவ்வாறு மாறுகிறதோ, அதற்கேற்ற விதத்தில் இந்தியா தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது, புதுப்பிக்கிறது.  - படம்: செயற்கை நுண்ணறிவு

மாறிவரும் உலகச் சூழலில் உலக நாடுகளுடன் இந்தியா கவனத்துடனும் நடைமுறைச் சிந்தனையுடனும் உறவாடி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்காதபோதும் ஈடுபாடு காட்டுகிறது. பாதுகாப்பு, மனிதாபிமான உதவி ஆகியவற்றுடன் சுரங்கத் தொழில் போன்றவற்றில் இரு நாடுகள் திட்டங்களில் இணைந்து ஒத்துழைக்கவுள்ளன. 

அக்டோபர் 9 முதல்  16 வரை புதுடெல்லிக்கு தலிபான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் மட்டாக்கி அண்மையில் சென்றிருந்தார். அதற்கு அடுத்து, காபூலில் இந்தியா, தனது செயல்பாட்டுக் குழுவைத் தூதரகமாக மாற்றவுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றுடன் இந்தியா வர்த்தக ரீதியாகக் கையாண்டுவரும் நிதானப்போக்கு, ஆண்டாண்டுகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் அணிசேராக் கொள்கையின் நீட்சியாக உள்ளது. 

பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் புதிய பூசல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் அணிசேராக் கொள்கை உதவக்கூடும்.

உலகச் சூழல் எவ்வாறு மாறுகிறதோ, அதற்கேற்ற விதத்தில் இந்தியா தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது, புதுப்பிக்கிறது. எவர்பக்கமும் சாராதிருப்பதற்குச் செயல்படாமல் இருந்தது பழைய போக்கு. மும்முரமாக எல்லாத் தரப்பினருடன் வெவ்வேறு விதமாக ஈடுபாடு கொள்வது, புதிய போக்கு.

2021ல் ஆப்கானிய ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான் அரசிற்கு உலக அங்கீகாரம் குறைவாக உள்ளது. இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானின் வரவுச் செலவுத்திட்டத்தில் 75 விழுக்காடு, மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்தது. தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிதி நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் கடும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

சமய அடிப்படைவாதத்தைத் தழுவி ஆட்சி நடத்தும் தலிபானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அதன் கருத்தியலையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பதற்கு நிகராகாது என்பதை இந்தியாவும் வெளியுலகிற்கு உணர்த்த முற்படுகிறது. மியன்மார் ராணுவ அரசாங்கத்தையும் தைவானின் பிரிவினைவாத தலைமைத்துவத்தையும் கையாள இந்தியா, இதுபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

பாதுகாப்பு, பொருளியல் அக்கறைகளைக் கையாள்வது இலக்கு. பாகிஸ்தானைப் போல இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு மையமாக ஆப்கானிஸ்தான் திகழக்கூடாது என்றும் இந்தியா அக்கறைப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தலிபான், அக்டோபர் 10ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தது. இந்தியாவுக்கு மனநிறைவு அளிக்கும் நிலைப்பாடுகள் இவை. 

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லைச் சர்ச்சை நிலவும் நேரத்தில் அமைதி நிராகரிக்கப்பட்டால் ஆப்கானிஸ்தானுக்கு வேறு வழிகள் இருப்பதாக மட்டாக்கி, இந்தியாவில் இருந்தபடியே பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரையில் 3 பில்லியன் டாலருக்கு மேல் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்துள்ள இந்தியாவிடம் தலிபான், தனது நாட்டின் வளர்ச்சிக்காக மேலும் எதிர்பார்க்கிறது.

ஆப்கானிஸ்தானின் பாக்ராமி மாவட்டத்தில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, மருந்தகங்கள், நீர்வள நிர்வாக உதவித்திட்டங்கள் ஆகியவற்றால் ஆப்கானிய மக்களின் நலன் மேம்படும்.

பூசல்களைத் தணிக்கவும் வட்டார அளவிலாவது அமைதியை நிலைநாட்டவும் இந்த நூதன அணுகுமுறை உதவக்கூடும்.

குறிப்புச் சொற்கள்