தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முரசுக்களம்: எச்1பி விசா கட்டண உயர்வைச் சாதகமாக்க இந்தியா விரைந்து செயல்பட வேண்டும்

2 mins read
812c29aa-6d17-4668-b884-b5209e793e08
புதிய விசா கட்டணம் அமெரிக்காவின் புத்தாக்கத்தை பாதிக்கவுள்ளது. எனவே, திறனாளர்களைச் சொந்த நாட்டில் தக்கவைக்கும் வாய்ப்பாகக் கண்டு இந்தியா, உரிய கட்டமைப்பு மாற்றங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். - படம்: செயற்கை நுண்ணறிவு

அமெரிக்காவில் குறிப்பிட்ட சிறப்பு நிபுணத்துவப் பணிகளில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற வகைசெய்யும் எச்1எம்பி விசாவுக்கு  100,000 டாலர் கட்டணத்தை புதிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிமுகம் செய்துள்ளார்.

புதிய கட்டணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடப்பிற்கு வந்தது.

இந்த மாற்றத்திற்கு முன்னதாக எச்1பி விசா கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. முன்னதாக, கட்டணம் 1,700 டாலர் முதல் 4,500 டாலர் வரை இருந்தது. எந்த வகையான வேலை, வேலை செய்யும் நிறுவனம் எவ்வளவு பெரிது போன்ற விவரங்கள் கட்டணத்தை நிர்ணயித்தன.

வர்த்தக வரிகளை விதித்ததுபோல இந்த முடிவுமே எதிர்பார்க்கப்படாத அதிரடி நடவடிக்கை. தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் திறனாளர்களை அனுப்பும் நாடு இந்தியா.

2024ஆம் ஆண்டில் பதிவான 399,395 எச்1பி விசா ஒப்புதல்களில் 283,397 (71 விழுக்காடு) இந்தியக் குடிமக்களைச் சேர்ந்தது. 

அடுத்ததாகச் சீனர்களுக்கு 11.7 விழுக்காடு கிடைத்தது. அமெரிக்காவில் பல்லாண்டுகளாக இந்தியத் திறனாளர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினர் அமர்த்தப்படுவதால் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதால் இந்நடவடிக்கை தேவைப்படுவதாக திரு டிரம்ப் கூறுகிறார்.

ஆனால், இந்த விசாவின்கீழ் பணியமர்த்துவது அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா, கூகல் உள்ளிட்ட பெருநிறுவனங்கள். குறைந்த ஊதியப் பிரிவைச் சேர்ந்தவர்களை இந்நிறுவனங்கள் பெருவாரியாகப் பணியமர்த்துவதில்லை. 

அமெரிக்கக் குடிநுழைவு மன்றத்தின் தகவல்படி 2021ல் எச்1பி விசாதாரர்களின் சராசரி ஆண்டு வருமானம் 108,000 டாலர். இது, உயர்பிரிவினர்க்கான வருமானமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த வேலையின்மையின் குறைவுக்கும் எச்1பி விசாவின் அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும் குடிநுழைவு மன்றம், தரவு அடிப்படையில் கூறுகிறது.

இந்தத் திறனாளர்கள் இருப்பதால் புத்தாக்கமும் வர்த்தகமும் கூடுதலாக உள்ளது. பொருளியல் வளர்ச்சியை அவை ஊக்குவித்து உள்ளூரில் இருப்பவர்களுக்கும் வேலைகளை உருவாக்குகின்றன.

மைக்ரோசாஃப்டின் சத்ய நாதெல்லா, கூகலின் சுந்தர் பிச்சை, ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா, அடோபியின் ஷாந்தனு நாராயண் போன்றோர் முன்னதாக எச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. 

புதிய கட்டணம், அமெரிக்க வேலையிடங்களுக்கு மிகுந்த நிதிச்சுமை. மனிதவளத்தை அதிகம் நம்பியிராமல் தானியக்கமயமாதலைக் கூடுதலாக ஊக்குவிக்கும்.

ஜெர்மனியும் கனடாவும் இத்தகைய ஊழியர்கள் நாடும் கவர்ச்சிமிகு வேலையிடங்களாக மாறும். இந்தியாவிலேயே தங்களது வாழ்க்கைத் தொழிலைத் தொடரவும் இந்தக் கட்டணம் ஊக்குவிக்கக்கூடும். இது நல்லது என்றாலும் இந்தியத் திறனாளர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இந்திய உள்நாட்டுத் தொழில்துறைகள் வளர்வதற்குக் கூடுதல் காலம் ஆகலாம். 

புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு ஆதரவளிக்கும் ‘சிலிக்கான் வேலி’ சூழல் இந்தியாவில் இன்னும் உருவாகவில்லை. இந்தியத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் நன்மைகள் இந்தியாவிலேயே உணரப்பட வேண்டும் என்றால் அதற்கான உள்கட்டமைப்பு மாற்றங்களை இந்தியா விரைந்து செயல்படுத்தவேண்டும்.

குறிப்புச் சொற்கள்