உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு அனைத்துலக விநியோகச் சங்கிலியைப் பேரளவில் மாற்றியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உலவும் எண்ணெய்க் கப்பல்கள் முதல் சீனாவின் ஷாங்காய் நகரில் விறுவிறுப்பாக இயங்கிவரும் இயந்திர மனிதக் கூடங்கள் வரை, இறக்குமதி வரிகளின் அதிர்வலைகள் உலகெங்கும் உணரப்படுகின்றன.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து இறக்குமதி செய்யும் இந்தியா மீதான தனது காட்டத்தின் வெளிப்பாடாக அமெரிக்கா, இந்தியத் தயாரிப்புகள்மீது 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்துள்ளது.
தற்போதுள்ள புவிசார் அரசியல், விலையைப் பற்றியது மட்டுமன்று, உண்மைப்பற்றையும் குறித்தது என்பதை அமெரிக்க வரிவிதிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான கட்டமைப்புகளைச் சீனாவும் இந்தியாவும் படிப்படியாக உருமாற்றி வருகிறது. அமெரிக்கா தனது பொருளியல் ஆயுதத்தைக் கூர்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு சரக்குப்பொருள் பயணமும், ஒவ்வொரு பங்காளித்துவமும், ஒவ்வொரு கொள்கையும் உலக நாடுகளின் மீள்திறனுக்குச் சோதனையாகின்றன.
தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கான விதைகள் பல்வேறு நாடுகளில் விதைக்கப்பட்டு, அவை ஓரளவு வளர்ந்துள்ள செடிகளாக இன்று காண்கிறோம். தென்னமெரிக்கா, தென்கிழக்காசியா ஆகியவற்றுக்குச் சீனா குறைந்த விலையில் தானியக்க இயந்திரங்களை வழங்கி வருகிறது. அச்சீன இயந்திரங்களின் விலை, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட அனுபவமிக்க விநியோகிப்பாளர்களைக் காட்டிலும் குறைவு.
இயந்திர மனிதவியலின் உச்சாணிக்கொம்பைச் சீனா இன்னும் தொடவில்லை. ஆனால், அயராது உழைக்கும் மக்கள் வளத்தையும் அரசாங்கத்தால் நன்கு திட்டமிட்ட பொருளியலையும் கொண்டுள்ள சீனாவுக்கு வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க வெகுகாலம் ஆகாது.
தன்னிறைவை அதிகரிக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தால் வணிகத் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றலைச் சீனா கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் பாதை மாறுபட்டது என்றாலும் அதுவும் பெருமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது; அனைத்துலக விநியோகச் சங்கிலியின் சிதறலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது.
ஜப்பானுடனும் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா 2021ல் தொடங்கிய அனைத்துலக விநியோகச் சங்கிலி மீள்திறன் திட்டம் (Supply Chain Resilience Initiative) மூலமாக சமநிலைமிக்க, பலதரப்புகளை ஒருங்கிணைக்கும் தயாரிப்பு முறையை உருவாக்க இந்தியா முனைகிறது.
பகுதி மின்கடத்திக்கான ஓட்டப்பந்தயத்தில் துடிப்புடன் முந்திக்கொள்ளவும் இந்தியா முற்படுகிறது. 2023ல் 38 பில்லியன் வெள்ளி மதிப்புடையதாக இருந்த பகுதி மின்கடத்திகளுக்கான சந்தை, 2030ல் 109 பில்லியன் வெள்ளியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணினிச் சில்லுகளின் உருவாக்கத்திலும் பரிசோதனைகளிலும் பல்லாண்டு அனுபவம் கொண்டுள்ள மலேசியா, இந்தியாவுடன் கைகோக்கும் முக்கியப் பங்காளியாக மாறக்கூடும். இவ்வாண்டு மார்ச் மாதம் மலேசியப் பிரதமர் இந்தியாவுக்குச் சென்று வந்ததை அடுத்து, அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது விரிவான உத்திபூர்வ பங்காளித்துவமாக உயர்ந்துள்ளது. இதனால், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு வலுவாகியுள்ளது.
ரஷ்யாவுடன் இந்தியா நீண்டநாள் உறவு பாராட்டுவதன் விளைவாக நுண்சில்லுகள், இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தவல்ல கணினிச் சேவையகம் ஆகியவை இந்தியாவிலிருந்து ரஷ்ய ராணுவத்துறையைக் கூடுதல் அளவில் சேர்கின்றன.
மலேசியாவின் பார்வை, ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது. அதிபர் புட்டினை மலேசிய மன்னர் அண்மையில் காணச் சென்றது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் அதிகரித்துள்ள பதற்றம், இந்தியாவை சீனா பக்கம் மேலும் தள்ளிவிடக்கூடும்.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) முதல் திங்கட்கிழமை ( செப்டம்பர் 1) வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வார். அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
எனவே, மெல்ல வெளிவரும் உண்மை இது: நாடுகள், தொழிற்சாலைகளை பொருளியலுக்காக மட்டும் ஈடுபடுத்துவதில்லை. தொழிற்சாலைகள் இப்போது தற்காப்புக் கோட்டைகளாகவும் உள்ளன. பதற்றமிக்க இன்றைய உலகில் பன்னாட்டு வணிகப் பாதைகள் மறைமுக போர்க்களங்களாக மாறிவருகின்றன. ஆயுதங்கள் கொண்டு சண்டை போடாமல் வரிவிதிப்பு, கணினி நிரல்கள் என்று பன்னாட்டு மோதல் புதிய நூதனங்களைக் காண்கிறது.