ஆக்லாந்து: தமது இரு குழந்தைகளையும் கொன்று பயணப்பெட்டியில் மறைத்து வைத்ததாக நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பெண் குற்றவாளி எனச் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 23) தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஹாக்யூங் லீ, நியூசிலாந்துக் குடியுரிமை கொண்ட தென்கொரியராவார்.
தென்ஆக்லாந்தில் உள்ள கிடங்கு ஒன்றில் அவர் விட்டுச் சென்ற பயணப்பெட்டிகளில் குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 2022ஆம் ஆண்டில் தென்கொரியத் தலைநகர் சோலிலிருந்து லீ ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
மாண்ட குழந்தைகளான யூனா ஜோவும் மீனு ஜோவும் கொலையுண்டபோது அவர்களுக்கு முறையே எட்டு மற்றும் ஆறு வயது.
அவர்கள் மரணம் அடைந்து கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டில் லீயின் கணவர் மரணமடைந்ததாகவும் அதையடுத்து அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படக்கூடாது என்று அவர்கள் வாதிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், தமது குழந்தைகளைக் கொன்றபோது லீ சுயநினைவுடன்தான் இருந்தார் என்றும் அதைத் தெரிந்தேதான் அவர் செய்தார் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
உடல்களைப் பயணப்பெட்டிகளில் மறைத்துவைத்து, பிறகு நாட்டைவிட்டு தப்பிச் சென்றது இதைக் காட்டுவதாக அவர்கள் வாதிட்டனர்.
லீக்கு நவம்பரில் தண்டனை விதிக்கப்படும்.