இம்ரான் கான் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன: வழக்கறிஞர்

இம்ரான் கான் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன: வழக்கறிஞர்

2 mins read
df54a4dc-bed5-45ea-803c-1014a6d16c3b
பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆர்வலர்களும் ஆதரவாளர்களும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக கராச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட கொலைத் தூண்டல் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரராக இருந்து பின்னர் அரசியல்வாதியான திரு கானுக்கு இது சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் திரு கான் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அப்துல் ரஸாக்கின் கொலையைத் தூண்டியதாக கடந்த ஜூன் மாதம் திரு கான்மீது குற்றச்சாட்டப்பட்டது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க, அரசாங்க வழக்கறிஞரை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்மேற்கு நகரான குவெட்டாவில் திரு ரஸாக்கை மோட்டார்சைக்கிகளில் சென்றுகொண்டிருந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். திரு ரஸாக்கின் மகன் தம் தந்தையின் கொலைக்குத் திரு கான்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்னர், திரு ரஸாக் நீதிமன்ற மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்காகத் திரு கானுக்கு எதிராகத் தேச துரோகம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்று திரு ரஸாக் கேட்டுக்கொண்டார்.

திரு கான் பாகிஸ்தானின் செல்வாக்கு மிகுந்த ராணுவத்திடமிருந்து பிரிந்த பிறகு ஆட்சியை இழந்தார். அவர் ஆதரவு திரட்ட முயன்றுவரும் நிலையில் அவருக்கு எதிராகப் பல நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசியல் சர்ச்சையால் பாகிஸ்தான் பிளவுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

வரும் நவம்பர் மாதத்தில், அங்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது அடுத்த ஆண்டு தொடக்கம் வரை தள்ளிவைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்