கொலை மிரட்டல் வழக்கு: பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா பிணையில் விடுதலை

கொலை மிரட்டல் வழக்கு: பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா பிணையில் விடுதலை

2 mins read
683ad337-1a85-44e9-b863-524230761f4f
பிணை உத்தரவு ஆவணத்தைச் செய்தியாளர்களிடம் காண்பிக்கும் பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டார்ட்டே. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர்  உட்பட அவரது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கைதாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபர் சாரா டுட்டார்ட்டே  நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணை பெற்றார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி செய்தியாளர் சந்திப்பில், தான் கொல்லப்பட்டால் அதிபர் மார்க்கோஸ், அவரது மனைவி மற்றும் உறவினரான நாடாளுமன்றச் சபாநாயகரைக் கொல்வதற்கு ஆள் அமர்த்தியுள்ளதாகச் சாரா டுட்டார்ட்டே கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், தனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.  இதைத்தொடர்ந்து, மூன்று கடுமையான மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டு, சனிக்கிழமை (செப்டம்பர் 5) கேசான் நகர் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையான சாரா, தலா 120,000 பேசோ (ஏறத்தாழ $1,900) ரொக்கப் பிணைத் தொகையைச் செலுத்தி விடுதலை பெற்றார்.  

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சாரா, “இன்று இரவு நான் இறந்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

காவல்துறையினர் மிக எளிதாகத் “தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, அதை ஒரு விபத்து என்று கூறி முடித்துவிடுவார்கள்” என்ற அவர், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்ததுடன், காவல்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.  

ஏற்கெனவே ஊழல், நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காகச் செனட் அவையில் பதவிநீக்க விசாரணையை அவருக்கு, இந்த புதிய கைது உத்தரவு மேலும் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவரது திட்டம் முற்றிலும் பாதிக்கப்படக்கூடும்.  

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்வழக்குதுணை அதிபர்