நியூயார்க்: ‘டெஸ்லா’ கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான இலோன் மஸ்க் இவ்வாண்டு இந்தியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மஸ்க் பேசினார். அதைத்தொடர்ந்து மஸ்க்கின் இந்தியப் பயணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மஸ்க், இந்தியாவில் டெஸ்லா கார் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டார். தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமது இந்தியப் பயணம் குறித்து எக்ஸ் தளத்திலும் திரு மஸ்க் சனிக்கிழமை (ஏப்ரல் 19) பதிவிட்டார்.
பெருஞ்செல்வந்தர் மஸ்க் ஓராண்டுக்கு முன்னரே இந்தியா செல்லவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தமது பயணத்தை அவர் ரத்து செய்தார்.
மஸ்க்கின் இந்தியப் பயணம் அவருக்கு மிகமுக்கியமானது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் மஸ்க்கின் டெஸ்லா, எக்ஸ் தளம், ஸ்டார்லிங் நிறுவனங்களுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. தமது பிரச்சினைகளைச் சரிசெய்ய இந்தியப் பயணம் ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.