கோலாலம்பூர்: கூடுதல் சம்பளம் வழங்குமாறு அரசாங்கத் தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் தாம் முன்னுரிமை வழங்கவிருக்கும் அம்சங்களை திரு அன்வார் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 3) விவரித்தார். மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
கூடுதல் சம்பளம் வழங்குவதன் தொடர்பில் படிப்படியான சம்பள முறை, குறைந்த வருவாய் ஈட்டும் நிறுவனங்களை உள்ளடக்காது என்று அவர் குறிப்பிட்டார். அதேவேளை, தங்களின் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்குமாறு அரசாங்கம், பெரிய நிறுவனங்களுக்கு நெருக்குதல் தரும் என்றும் அவர் சொன்னார்.
“சில துறைகளில் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் (304.42 மில்லியன் வெள்ளி) முழு லாபம் பார்க்கின்றன. ஆனால், அவை வழங்கும் சம்பளம் குறைவாக இருக்கிறது.
“எல்லா துறைகளிலும் நான் நெருக்குதல் அளிக்கப்போவதில்லை. சிலவற்றின் மீது நெருக்குதல் அளிக்க முடியாது. கூடுதல் சம்பளம் தருமாறு குறைந்த வருவாய் ஈட்டும் நிறுவனங்களை அரசாங்கம் கட்டாயப்படுத்தாது. அதேவேளை, உற்பத்தித் திறனும் லாபமும் அதிகரிக்கும்போது வேறுபாட்டை அதிகரிக்கவிட்டு சம்பளம் உயராமல் இருக்க விடுவது நியாயமன்று,” என்று தமது பிரதமர் அலுவலகத்திடம் திரு அன்வார் எடுத்துரைத்தார்.
அதோடு, கடும் வறுமை, வெள்ளம் ஆகியவை இவ்வாண்டு கையாளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“வெள்ளத்தால் வீடுகள் அழிந்து உயிர் பலி ஏற்பட்டால் பிரச்சினையைச் சரிசெய்ய ஆறு ஆண்டுகள் காத்திருக்கக்கூடாது. தேவைப்பட்டால் சிக்கனமாக இருப்போம்; கடன் வாங்குவது அவசியம் என்றால் அதையும் செய்வோம்.
“பெரிய பிரச்சினைகளைக் கூடுமானவரை விரைவில் தீர்த்துவைக்க அவற்றுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைத் துரிதப்படுத்தவேண்டும். அதற்காக தேவைப்பட்டால் மற்ற சில விவகாரங்களுக்கு வழங்கப்படும் ஆதரவைக் குறைத்துக்கொள்வோம்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டின் ஆற்றலில் குறைபாடு இருப்பதாக என்னிடம் கூறாதீர். அதை நான் கேட்க விரும்பவில்லை. பிரச்சினையை நாம் சரிசெய்யவேண்டும்,” என்று மாதந்தோறும் தமது ஊழியர்களுக்கு ஆற்றும் உரையில் திரு அன்வார் விவரித்தார்.