சிங்கப்பூரின் சையது ஆல்வி சாலையில் 'முஸ்தபா சென்டர்' என்ற மாபெரும் சில்லறை விற்பனைக் கடையை நடத்திவரும் முஸ்தபா நிறுவனம், மலேசியாவின் ஜோகூர் பாருவில் தனது முதல் பல்பொருள் விற்பனைக் கடையைத் திறக்கவுள்ளது.
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள கேப்பிட்டல் வோர்ல்டு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
தம்போயில் உள்ள தனக்குச் சொந்தமான 11 மாடி கேப்பிட்டல் சிட்டி கடைத்தொகுதியின் பெரும்பகுதியை 368 மில்லியன் ரிங்கிட் (S$113.7 மி.) விலைக்கு கேப்பிட்டல் சிட்டி, முஸ்தபா நிறுவனத்திற்கு விற்கவுள்ளது.
அக்கடைத்தொகுதியில் விற்பனையாகாமல் இருக்கும் 591 சில்லறைக் கடைகள் உட்பட 1.28 மில்லியன் சதுர அடி பரப்பளவும் 2,181 கார் நிறுத்துமிடங்களும் முஸ்தபா வசமாகும்.
"எல்லாப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியாக சிங்கப்பூரில் மாபெரும் கடையைத் திறந்து பெயர்பெற்ற நிலையில், மலேசியாவில் கால்பதிப்பதற்கு நேரம் கைகூடியுள்ளதாக நம்புகிறோம்," என்று முஸ்தபா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஸ்டாக் அகமது தெரிவித்திருக்கிறார்.
முஸ்தபா பல்பொருள் அங்காடியும் கேப்பிட்டல் சிட்டி கடைத்தொகுதியும் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

