எல்லாரும் நேசிக்கும் பிரதமராக இருப்பதே என் விருப்பம்: அன்வார்

எல்லாரும் நேசிக்கும் பிரதமராக இருப்பதே என் விருப்பம்: அன்வார்

2 mins read
e369c104-d8aa-4ef7-a292-01ea8287c2ba
பிரதமர் அன்வார் இப்ராகிம் உணவு நிலையத்திலிருந்து தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். - படம்: பெர்னாமா

குலுவாங்: ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மலேசியப் பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவருமான அன்வார் இப்ராகிம் தமது இரண்டாவது நாள் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) காலை தொடங்கினார்.

குலுவாங் அருகில் உள்ள சிம்பாங் ரெங்காமில் உணவு நிலையம் ஒன்றில் அவர் லயாங்-லயாங் தொகுதி வாக்காளர்களைச் சந்தித்தார்.

முன்னதாக, காலை 8.40 மணிக்கு ‘வாருங் பாக் டின்’ வளாகத்திற்குச் சென்ற பிரதமரை அவரது ஆதரவாளர்களும் பக்கத்தான் ஹரப்பான் பிரசாரக் குழுவினரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அவர்கள் அனைவரும் காலை 7 மணிக்கெல்லாம் அந்த இடத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர்.

காலை உணவு சாப்பிட்ட திரு அன்வார், தொகுதி மக்களுடன் மிகவும் இயல்பாகக் கலந்துரையாடினார். பின்னர், வாக்காளர்களோடு அவர் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார்.

மச்சாப் தொகுதியின் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் நூர் ஹஃபிஸ் ரோஸ்லானும் லயாங்-லயாங் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணனும் பிரதமர் அன்வாருடன் காணப்பட்டனர்.

பிரதமரின் பிரசார நிகழ்வில் பங்கேற்க வந்தோரில் பெரும்பாலானோர், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக சிவப்பு நிற உடையில் வந்திருந்தனர். அதனால், அந்த இடம் ஒரே சிவப்புமயமாகக் காட்சியளித்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.

ஜோகூர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் 56 தொகுதிகளிலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகேஆர் 20 தொகுதிகளிலும் ஜனநாயகச் செயல் கட்சி 17 இடங்களிலும் அமானா கட்சி 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த 172 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய திரு அன்வார், அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு பிரதமராக இருப்பதையே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவின் உயர்மட்டத் தலைவர் என்ற முறையில், மக்களின் இனம் அல்லது அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சேவை செய்ய தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜோகூர் எனது மாநிலம், மலேசியா எனது நாடு. பிரதமராகிய நான் என் நாட்டு மக்களுக்கு எனது அன்பைக் காட்ட வேண்டும்.

“எனக்கு வயதாகிவிட்டது. என்றாவது ஒருநாள் நான் ஓய்வு பெறும்போது, ​​மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரை நல்ல முறையில் கவனித்துக்கொண்ட ஒரு தலைவராக நினைவுகூரப்பட விரும்புகிறேன்,” என்றார் திரு அன்வார்.

குறிப்புச் சொற்கள்