5,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மியன்மார் சம்மதம்

5,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மியன்மார் சம்மதம்

1 mins read
f85c91d4-885d-4970-bcc2-b15ef50a093d
மலேசியாவில் உள்ளூர் சமூகத்தினருக்கும் அகதிகளுக்கும் இடையே அண்மையில் பதற்றம் நிலவிவந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் தங்கி வரும் 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்ப ஏற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ளூர் சமூகத்தினருக்கும் அகதிகளுக்கும் இடையே அண்மையில் பதற்றம் நிலவிவந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மியன்மாருடன் மலேசியா பேணிவரும் நல்லுறவே இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உதவியதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்த மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

மியன்மாரில் பல ஆண்டுகளாகக் குடியுரிமை மறுக்கப்பட்டு, குடியுரிமை இல்லாத மக்களாக வாழும் ரோஹிங்கியர்களுக்கு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியா நீண்டகாலமாகப் பாதுகாப்பான புகலிடமாக விளங்கிவருகிறது.

பிப்ரவரி மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அகதிகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், மலேசியாவில் சுமார் 126,000 ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர்.

5,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள மியன்மார் இணங்கியிருப்பது குறித்து திரு அன்வார் வெளியிட்ட தகவல் தொடர்பாக மியன்மார் கருத்துரைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
மலேசியாரோஹிங்யாஅகதிமியன்மார்