வானூர்தித் தாக்குதலால் மியன்மார் விமான நிலையம் மூடப்பட்டதாகத் தகவல்

வானூர்தித் தாக்குதலால் மியன்மார் விமான நிலையம் மூடப்பட்டதாகத் தகவல்

1 mins read
6046ee24-fa24-46e3-b2f5-738a893177c9
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்டாலே விமான நிலையம். - படம்: கூகல் மேப்ஸ்

யங்கூன்: மியன்மாரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) முதல் இரு நாள்களுக்கு மூடப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவ அரசு குற்றம் சாட்டியதை அடுத்து மண்டாலே என்னும் பெயரிலான அந்த விமான நிலையம் மூடப்பட்டது.

மியன்மாரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து மையமாக அந்த விமான நிலையம் விளங்குகிறது.

அதேவேளை, ராணுவ விமானங்கள் தங்களது தாக்குதல்களைத் தொடங்குவதற்கான ஓடுபாதையாக அது பயன்படுத்தப்படுவதாகவும் கருதப்படுகிறது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 10) பிற்பகலில் ஆறு தற்கொலைப்படை வானூர்திகள் அந்த விமான நிலையத்தைத் தாக்கியதாக ராணுவத்தரப்பு அரசு அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

அந்தத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, “மண்டாலே விமான நிலையம் இன்றைக்கும் நாளைக்கும் மூடப்பட்டுள்ளது,” என்று பாதுகாப்பு வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

“விமான நிலையக் கட்டடத்திலிருந்து சற்று தொலைவில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வானூர்திதாக்குதல்மியன்மார்