ஆயுதமேந்திய குழுக்கள்வசம் சென்ற சீனா-மியன்மார் எல்லைப் பகுதி

1 mins read
8d7f5e17-d794-49e9-9557-115934ed3fa4
எல்லைக் குறுக்கிணைப்புக்கு அருகில் நிறுத்தப்பட்ட ஏறக்குறைய 120 வாகனங்கள் தீக்கிரையாகின. - படங்கள்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: மியன்மாரில் ஆயுதமேந்திய இனவாதச் சிறுபான்மைக் கூட்டணி ஒன்று, அந்நாட்டை ஆளும் ராணுவத்திடமிருந்து சீனாவுக்கான எல்லைக் குறுக்கிணைப்பைக் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகமும் பாதுகாப்புத் தகவல்களும் கூறுகின்றன.

சீன எல்லைக்கு அருகில் உள்ள மியன்மாரின் வடக்கு ஷான் மாநிலத்தில் சண்டை மூண்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஆயுதமேந்திய மூன்று இனவாதச் சிறுபான்மைக் குழுக்கள் ராணுவத்திற்கு எதிராகக் கூட்டாகத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு சண்டை தொடங்கியது.

அந்தக் குழுக்கள் பல ராணுவ நிலைகளையும் சீனாவுடனான வர்த்தகத்திற்கு முக்கியமான ஒரு நகரையும் கைப்பற்றியுள்ளன.

அதன் காரணமாக நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ராணுவத்திற்கான வர்த்தக வழிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று குழுக்களில் ஒன்றான மியன்மார் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை நடத்திய தாக்குதலில் ‘கின் சான் கியோட்’ எல்லை நுழைவாசல் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகமான ‘கொகாங்’ கூறியது.

அராக்கன் ராணுவம், த’அங் தேசிய விடுதலை ராணுவம் உள்ளிட்ட அந்தக் கூட்டணி எல்லை வர்த்தகப் பகுதியில் உள்ள மற்ற இடங்களையும் கைப்பற்றியிருப்பதாக அது தெரிவித்தது.

மியன்மார் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை, ‘கின் சான் கியோட்’டில் உள்ள எல்லை வர்த்தகப் பகுதியில் அதன் கொடியை உயர்த்தியிருக்கிறது என்று ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்