யங்கூன்: மியன்மாரிலிருந்து தப்பிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 150 ரோஹிங்யா அகதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
அவர்கள் பங்ளாதேஷிலிருந்து அனுமதி இல்லாமல் மியன்மாருக்குள் நுழைந்திருப்பதாக யங்கூன் கூறுகிறது. குடியுரிமை மறுக்கப்பட்ட அவர்களுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி தேவை. 2017ஆம் ஆண்டில் மியன்மார் ராணுவம் ரோஹிங்யா அகதிகள்மீது கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் பங்ளாதேஷுக்குத் தப்பினர்.அதனைத் தொடர்ந்து, ஐநா முன்னணி நீதிமன்றம் ஒன்றில் மியன்மார் இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.
இந்நிலையில் பங்ளாதேஷிலும் மியன்மாரிலும் உள்ள முகாம்களிலிருந்து தப்பித்து முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் செல்ல இப்போது ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்ற வாரம் மியன்மார் கடலோரப் பகுதியில் ஏறத்தாழ 50 ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. மீட்புப் பணியாளர்கள் 17 சடலங்களை மீட்டுள்ளனர். இருப்பினும், எஞ்சியவர்களை இன்னும் காணவில்லை.
இதற்கிடையே மியன்மாரின் ‘மோன்’ மாநிலத்தில் உள்ள ‘வேக்காமி’ கிராமத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை 127 ரோஹிங்யா ஆடவர்களும் 18 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், குடிநுழைவுச் சட்டத்தின்படி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநில நிர்வாக மன்றத்தின் பேச்சாளர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

