மியன்மார்: மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் சிறைத்தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17), ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
80 வயதாகும் திருவாட்டி சூச்சி, தமக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையை நிறைவேற்றிவரும் நிலையில், அவரது தண்டனை ஆறில் ஒரு பங்கு (ஏறத்தாழ நாலரை ஆண்டுகள்) குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நோபெல் பரிசு பெற்றவரான அவர்மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு அவற்றுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தவறிழைக்கத் தூண்டியது, ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்டவை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அவை. இருப்பினும், அவரை முடக்கும் திட்டத்துடன் அரசியல் நோக்குடன் அந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டதாக திருவாட்டி சூச்சியின் நண்பர்கள் கூறுகின்றனர்.
மீதமுள்ள தண்டனைக் காலத்தில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவாரா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்று வழக்கறிஞர் கூறியதாகத் தெரிகிறது.
மியன்மாரின் புதிய அதிபர் மின் ஆங் ஹிலெய்ங், சிறைக்கைதிகள் 4,335 பேருக்கு வெள்ளிக்கிழமை மன்னிப்பு வழங்கியதாக அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது. கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக இவ்வாறு கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்திருந்த திருவாட்டி சூச்சியின் அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் திரு மின் ஆங் ஹிலெய்ங் கவிழ்த்ததை அடுத்து, மியன்மாரில் பெருங்குழப்பம் நிலவியது. ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அனைத்துலகக் கவனிப்பாளர்கள் அந்தத் தேர்தல் நடைமுறை நியாயமற்றது எனக் கடுமையாகக் குறைகூறுகின்றனர்.
இதற்கிடையே, மியன்மாரின் முன்னாள் அதிபர் வின் மியிந்த், வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னர் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். திரு வின் மியிந்த், 2018ஆம் ஆண்டு முதல் மியன்மாரின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார்.

