பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அக்டோபர் 26ஆம் தேதியன்று கிராண்ட் இன்டர்நேஷனல் அழகிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் ரேச்சல் குப்தா மகுடம் சூடினார்.
இரண்டாவது இடத்தை பிலிப்பீன்ஸ் அழகி கிறிஸ்டின் ஜுலியேன் ஒபியாசா பிடித்தார்.
மியன்மாரின் தே சு நியேன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஆனால் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இப்போட்டிக்கான மியன்மாரின் தேசிய இயக்குநர் திரு ஹிடூ ஆன்ட் லுயின் மேடையில் ஏறி குமாரி தேக்கு சூடப்பட்ட கிரீடத்தை அகற்றி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
போட்டியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக கிராண்ட் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியை நடத்துவோர் அவருக்கு வாழ்நாள் தடையை விதித்துள்ளனர்.
இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட மூன்றாவது இடத்தை குமாரி தே அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளார்.
போட்டியில் முதல் இரண்டு இடங்களை வென்ற அழகிகளுடன் தமக்கு எவ்வித பகை உணர்வும் இல்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், தேசிய ஆடைக்கான பரிசு தமக்குத் தரப்படும் எனத் தமது நாட்டுக்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்ததாகவும் நடுவர்களின் முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் குமாரி தே கூறினார்.
அழகிப் போட்டிக்கான மகுடத்துக்காக அப்போட்டியின் தலைவர் திரு நவாட் இட்சராகரிசில் $33,050 விலை பேசியதாக திரு ஹிடூ குற்றம் சுமத்தியிருந்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்த திரு இட்சராகரிசில் இதை மறுத்துள்ளார்.
போட்டியின் முடிவுகளை மியன்மார் அழகியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அவரே சொந்தமாக போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் பேங்காக்கில் உள்ள மோவன்பிக் சுக்கிம்விட் 23 ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு இட்சராகரிசில் கூறினார்.