பேங்காக்: தாய்லாந்து - மியன்மார் நட்புப் பாலம் என்று வர்ணிக்கப்படும் தனது எல்லைப் பகுதியை மியன்மார் மூடியதால் அது வழியாக இடம்பெறும் வணிகம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
வணிக வருமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் நோக்கில் மியன்மார் அந்த அந்த எல்லைப் பகுதியை மூடியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது அங்கு நடைபெற்று வந்த 130 பில்லியன் பாட் S$5.1மி.) பெறுமானமுள்ள வணிகப் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) மியன்மாரின் கயின் மாநிலத்தின் மியாவாடி பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் எதிர்பாராத விதமாக கனரக வாகனங்கள், வணிகப் பொருள்கள் போன்றவற்றுக்கு எல்லைப் பாதையை மூடியதாகத் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் சுங்க அதிகாரிகள் உட்பட எவருக்கும் எவ்வித முன்னறிப்பும் இன்றி எல்லை மூடப்பட்டதாக அறியப்படுகிறது.
அவ்வழியே இடம்பெறும் வணிகம் மூலம் ஈட்டக்கூடிய லாபம் மியன்மாரின் மத்திய அரசாங்கத்திற்குச் செல்ல ஏதுவாக இந்த உத்தரவை மியன்மார் தலைநகர் நெய்பிடாவில் உள்ள அதிகாரிகள் பிறப்பித்ததாக செய்திகள் கூறுகின்றன.
பல ஆண்டுகளாக இதில் கிடைக்கும் லாபத்தின் கணிசமான பகுதி எல்லைப் பாதுகாப்புப் படை உட்பட பல போராளிக் குழுக்களுக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதைக் கட்-டுப்படுத்தி தனது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மியன்மார் அரசாங்கம் இவ்வாறு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள முக்கியமான பாலம் மூடப்பட்டபோதிலும் அங்கிருக்கும் முதல் நட்புப் பாலம் என்ற மற்றொரு பாலம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக அறியப்படுகிறது. அந்தப் பாலம் பாதசாரிகளுக்கும் சிறு வணிகங்களுக்கும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.