பேங்காக்: மியன்மாரை வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.
அது சாலைகள் பாளம் பாளமாக விரிய, பல நூற்றாண்டுகளாக இருந்த சமயக் கட்டடங்கள் சரிந்து விழ, பல அடுக்குமாடிக் கட்டடங்கள் முற்றிலுமாக அழிய காரணமாக விளங்கியது. அதுமட்டுமல்லாது நிலநடுக்கம் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சேதம் ஏற்படுத்தியதுடன் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மியன்மாரைப் புரட்டிப் போட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தற்பொழுது கணக்கிட முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால், மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் நிலநடுக்கம் மையம் கொண்டது, அங்கு மக்கள்தொகை அதிகமாக இருப்பது, அங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையில் பல கட்டடங்கள் இருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மாண்டோர் எண்ணிக்கை பெருமளவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க புவிமண்டல ஆய்வு மதிப்பீட்டின்படி இறந்தவர்கள் எண்ணிக்கை 10,000யும் தாண்டி மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி குறைந்தது மூன்று நகரங்களில் மட்டும் 144 பேர் இறந்துள்ளதாகவும் 732 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மதிப்பீடு மாண்டலே நகரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 என்ற சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது, நிலநடுக்கம் மையம் கொண்ட இடத்திலிருந்து 600 மைல்களுக்கு அப்பால் தாய்லாந்தில் உள்ள பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த 33 மாடிக் கட்டடத்தை தரைமட்டமாக்கியது.
அதில் குறைந்தது எட்டுப் பேர் இறந்துவிட்டனர் என்றும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 320 பேர் என்று தாய்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.