பேங்காக்: மியன்மாரை உருக்குலைத்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3,000ஐ தொட்டுள்ளது.
கடும் மழை பொழியக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு, மீட்புப் பணியாளர்களிடையே புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 என்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,515 என்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை 351 என்றும் ஜப்பானில் உள்ள மியன்மார் தூதரகம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளது.
மார்ச் 28ஆம் தேதி நிகழ்ந்த 7.7 ரிக்டர் நிலநடுக்கம், மியன்மாரில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கமாகும்.
28 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மியன்மாரின் பல கட்டடங்கள் உருக்குலைந்தன. ஏராளமான மக்கள் உணவு, தண்ணீரின்றி தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் நிலையை அந்த மோசமான நிலநடுக்கம் ஏற்படுத்தியது.
சடலங்களையும் காணாமல் போனோரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 11 வரை பருவம் தப்பிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை, மீட்புப் பணிகளைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளான மண்டாலே, காகெய்ங், தலைநகர் நேப்பிடாவ் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஏராளமான மக்கள் இன்னும் புதையுண்டு இருக்கும் வேளையில் மழை வர உள்ளது. மழை பெய்தால் புதையுண்டவர்கள் மேலும் நிலத்திற்குக் கீழ் செல்லக்கூடும். இப்போதுவரை உயிருடன் உள்ளவர்களை மீட்பது இயலாமல் போய்விடும்,” என்று மியன்மாரின் உதவிப் பணியாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மீட்புப் பணிகளில், அண்டைய தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 1,900 பேர் ஈடுபட்டுள்ளதாக மியன்மார் தூதரகம் குறிப்பிட்டு உள்ளது.