நேப்பிடோ: சீர்குலைந்திருக்கும் மியன்மாரின் பொருளியல் 2025/26 நிதியாண்டில் சுமார் 2.5 விழுக்காடு சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அந்நாட்டை உலுக்கிய மோசமான நிலநடுக்கம் அதற்கு முக்கியக் காரணம் என்று உலக வங்கி வியாழக்கிழமை (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான அந்த நிலநடுக்கத்தால் மியன்மாருக்கு ஏற்பட்ட நேரடி பாதிப்பின் மதிப்பு 11 பில்லியன் டாலர் (14.10 பில்லியன் வெள்ளி) எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்தொகை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 14 விழுக்காடாகும்.
நிலநடுக்கம் உலுக்காமல் இருந்திருந்தால் மியன்மாரில் கூடுதலாக சுமார் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பில் பொருளியல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 17 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது; ஒன்பது மில்லியன் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 3,700 என்று அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“நிலநடுக்கம் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது, பலரை வீடுகளிலிருந்து வெளியேறச் செய்தது. அதேநேரம். ஏற்கெனவே சிக்கலில் இருந்த பொருளியல் சூழலை மேலும் மோசமடையச் செய்துள்ளது. அதனால் மியன்மார் மக்களின் மீள்திறன் மேலும் சோதனைக்கு உள்ளாகிறது,” என்று உலக வங்கியின் தாய்லாந்து, மியன்மார் பிரிவு இயக்குநர் மெலிண்டா குட் அறிக்கையில் தெரிவித்தார்.
“பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் ஆக அதிகமாக இருப்போருக்கு உதவ மீட்பு முயற்சிகள் முக்கியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2024/25 நிதியாண்டில் மியன்மாரின் பொருளியல் ஒரு விழுக்காடு சுருங்கும் என்று சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் உலக வங்கி கணித்திருந்தது. அந்த நிதியாண்டு இவ்வாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது. மோசமான வெள்ளத்தால் மியன்மார் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வாறு கணிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனையடுத்து அந்நாடு உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது.