நேப்பிடா: மியன்மாரில் தற்போது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதுதொடர்பான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
முதற்கட்ட வாக்குப்பதிவில் மியன்மார் ராணுவத்திற்குத் தொடர்புடைய யுஎஸ்டிபி (USDP) கட்சி முன்னிலை வகிப்பதாக அந்நாட்டுத் தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டத் தேர்தல் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்தது. 56 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மிகக்குறைவான மக்களே வாக்களித்தனர்.
அதில் யுஎஸ்டிபி கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றது. யுஎஸ்டிபி கட்சியில் இருப்பவர்கள் ஓய்வுபெற்ற ராணுவத் தலைவர்கள்.
கீழ் சபைக்கான 40 இடங்களில் 38 இடங்களை யுஎஸ்டிபி கட்சி வென்றது. மாநில அவைக்கான 15 இடங்களில் 14 இடங்களில் யுஎஸ்டிபி கட்சி வென்றது.
மேல் அவைக்கான ஓர் இடத்தில் மட்டும் தேர்தல் நடந்தது. அதில் வா தேசியக் கட்சி (Wa National Party) வென்றது.
முழுமையான தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகவில்லை. ஜனவரி 11, 25ஆம் தேதிகளில் அடுத்த கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியது. நோபெல் அமைதிப் பரிசை வென்ற ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து நடக்கும் முதல் பொதுத் தேர்தல் இது.

