தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலநடுக்கத்துக்குப் பிந்திய போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் மியன்மார்

1 mins read
ff7237a9-3a92-4f27-b7e4-d851651571f2
மியன்மார் ராணுவம் சண்டைநிறுத்தம் நிலநடுக்கத்துக்குப் பிந்திய மறுகட்டுமானப் பணிகளுக்கு வழிவகுக்கும் என்றது. - படம்: ஏஎஃப்பி

யங்கோன் - மியன்மார் ராணுவம், இதற்குமுன் இருந்த மனிதநேய சண்டைநிறுத்தம் காலாவதியானதை அடுத்து நிலநடுக்கத்துக்குப் பிந்திய போர் நிறுத்த உடன்பாட்டை நீட்டித்துள்ளது.

மார்ச் மாதம் கிட்டத்தட்ட 3,800 பேரைப் பலிவாங்கிய மிகப் பெரிய நிலநடுக்கத்தை அடுத்து ராணுவம் போர் நிறுத்ததை அறிவித்தது.

போர் நிறுத்தம் இதற்குமுன் நீட்டிக்கப்பட்டபோதும் அடிக்கடி ஆகாயத் தாக்குதல்களும் சண்டையும் தொடர்ந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

ராணுவத் தகவல் பிரிவு மே 31 வெளியிட்ட அறிக்கையின்படி மே 31ஆம் தேதி காலாவதியான போர் நிறுத்த உடன்பாடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்புப் பணிகளை நடத்த அது உதவியாக இருக்கும் என்று அறிக்கை சொன்னது.

அரசாங்க அலுவலகங்கள், துறைகள், பொது குடியிருப்புகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றின் மறுகட்டுமானப் பணிகளில் மியன்மார் தீவிரமாக ஈடுபட்டிருப்பதையும் அறிக்கை குறிப்பிட்டது.

சுதந்திரமான, நியாயமான, பல கட்சிகள் பங்குபெறும் ஜனநாயக முறையிலான பொதுத் தேர்தலையும் மியன்மார் நடத்த போர் நிறுத்தம் அனுமதிக்கும் என்றது ராணுவம்.

இவ்வாண்டு தொடக்கத்தில் மியன்மார் ராணுவம், நீண்டகாலமாக உறுதிகூறிய தேர்தல் 2026 ஜனவரியில் நடைபெறும் என்று கூறியது.

இருப்பினும், தாக்க முற்படும் ஆயுதமேந்திய இனவாதக் குழுக்கள், கிளர்ச்சியாளர்கள்மீது தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தும் என்று ராணுவம் எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்