நேப்பிடோ: நடந்துமுடிந்த முதல்கட்ட தேர்தலில் தகுதிபெறும் மக்களில் பாதிக்குமேல் வாக்களித்துள்ளதாக மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் புதன்கிழமை (டிசம்பர் 31) தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தேர்தல்களைவிட அந்த எண்ணிக்கை தற்போது குறைவு. இந்தத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடைபெறுவதால், ராணுவ ஆட்சியினருக்கு ஆதரவாக உள்ள ஒருங்கிணைந்த ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி (USDP) வெற்றிபெறும் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கட்சி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் தலைமையில் இயங்குகிறது. மேலும் தேர்தல் பற்றிய எதிர்மறைக் கருத்துகளை ராணுவ ஆட்சியாளர்கள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்துள்ளனர். ராணுவ ஆட்சியை எதிர்த்த பல அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுப் பிறகு கலைக்கப்பட்டுள்ளன.
அதனால் ஐக்கிய நாட்டு நிறுவனம், மேற்கத்திய நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியன இந்தத் தேர்தல் நியாயமானதும் நம்பகமானதும் அல்ல என்று வலியுறுத்தி வருகின்றன.
ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்கள், அல்லது 52.13 விழுக்காடு அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்டோர் 102 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வாக்களித்துள்ளனர் என்று ராணுவ ஆட்சியின் பேச்சாளர் சா மின் டின் அரசாங்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
“வளர்ந்த ஜனநாயக நாடுகளில்கூட வாக்காளர் எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டுவது இல்லை. எனவே மியன்மார் தேர்தலில் வாக்களித்துள்ளோர் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இயங்கும் லாபநோக்கமற்ற அனைத்துலக தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு, மியன்மாரில் 2020, 2015 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 70 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி மாதம் 11, 25 ஆகிய இரு தினங்களில் மியன்மாரில் மீதம் உள்ள 330 நகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இருப்பினும் அவற்றில் சில இடங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

