பேங்காக்: மியன்மாரின் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகள், அதன் ராணுவ ஆதரவு பெற்ற தலைமையுடன் மீண்டும் உறவை ஏற்படுத்திக்கொள்ள எச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் ஆசியான் அமைப்பால் அந்நாடு பெரும்பாலும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளது.
மியன்மார் வெளியுறவு அமைச்சர் டின் மாங் சுவே, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) பேங்காக்கில் நடைபெறும் ஒரு முறைசாரா கூட்டத்தில் 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பின் அமைச்சர்களைச் சந்திப்பார். இது, 2021ஆம் ஆண்டு, ராணுவப் புரட்சிக்குப் பிறகு ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கும் மியன்மாருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை.
“இந்தச் சந்திப்புகள், மியன்மாருடன் படிப்படியாகவும் கொள்கை ரீதியாகவும் உறவை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன,” என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் துணை செய்தித் தொடர்பாளர் மராட்டி நலிதா அண்டாமோ கூறினார்.
“இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மியன்மார் குறித்த ஆசியானின் நீண்டகால நிலைப்பாட்டில் மாற்றத்தைக் குறிக்கவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், “இந்த சந்திப்பு முறைசாரா ஆலோசனைகளின் தன்மையுடையது. மியன்மாரின் நிலைமை குறித்த ஆசியானின் நிறுவப்பட்ட நிலைப்பாட்டையோ அல்லது முடிவுகளையோ மாற்றாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூச்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்ததிலிருந்து, மியன்மாரின் உயர்மட்டத் தலைவர்கள் முக்கிய உச்சநிலை மாநாடுகளில் கலந்துகொள்வதற்கு ஆசியான் தடை விதித்துள்ளது. இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.
அனைத்துத் தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கும் இந்த அமைப்பின் ஐந்து அம்ச அமைதித் திட்டம், சிறிதளவே முன்னேற்றம் கண்டுள்ளது. எச்சரிக்கையான ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் உறுப்பு நாடுகளுக்கும், கடுமையான நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கும் இடையே பிளவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தங்கள் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்பதை தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. இருப்பினும், நாடுகளின் இறுதிப் பட்டியல் இன்னும் உறுதி செய்யப்பட்டு வருவதாக பேங்காக் தெரிவித்துள்ளது.

