யங்கூன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாக அல்லது அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட 7,300க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மியன்மார் ராணுவ அரசாங்கம், திங்கட்கிழமையன்று (மார்ச் 2) பொது மன்னிப்பு வழங்கியது.
தனது ஆட்சிக்கு எதிராகச் செயல்படும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவிக்க ராணுவ அரசாங்கம் இந்த பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி வருவதாகக் குறைகூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டில் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூச்சியைச் சிறையிலடைத்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நிலவி வந்த ஜனநாயக முறையை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆங் சான் சூச்சியை ஆதரிக்கும் ஜனநாயக ஆர்வலர்கள் மற்றும் உள்நாட்டுப் போரில் ராணுவத்தை எதிர்க்கும் ஆயுதம் தாங்கிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் கடுமையான சட்டங்கள் அங்கு அமலில் உள்ளன.
இந்நிலையில், பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட கைதிகள் எந்தக் குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஜனவரி மாதம் தேர்தல் முடிவடைந்த நிலையில், பெயரளவில் ஓர் அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கும் முயற்சியாக, தனது பிம்பத்தை மென்மைபடுத்திக் கொள்ள ராணுவ அரசாங்கம் சில அரசியல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், திருவாட்டி சூச்சி இன்னமும் சிறையில் இருப்பதாலும், அவரது ஆட்சி கலைக்கப்பட்டதாலும் ராணுவ ஆதரவு கட்சி எளிதாக வெற்றி பெற்றதாலும் இந்த ஆட்சி மாற்றம் வெறும் கண் துடைப்பு நாடகம் என விமர்சகர்கள் சாடுகின்றனர்.

