மியன்மார் தேர்தலைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்களுக்கு அழைப்பு

2 mins read
717819a4-928e-43b7-9ec6-be5923cbd6d1
மியன்மாரில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது. - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் டிசம்பர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்களுக்கு மியன்மார் ராணுவம் அழைப்புவிடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியது. ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் மியன்மாரில் வன்முறை வெடித்தது.

அப்போதிலிருந்து மியன்மாரில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

உள்ளூர்ச் செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அதேபோல் பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மியன்மாரைவிட்டு வெளியேறின. ஆனால், ஏஎஃப்பி செய்தி நிறுவனம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், மியன்மாரில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக நடக்கும் தேர்தலில் 57 கட்சிகள் போட்டியிடுகின்றன.

“சில வாரங்களுக்குத் தொடர்ந்து நடக்கும் தேர்தலைப் பார்வையிட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது,” என்று மியன்மார் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல் மியன்மாரின் தகவல் அமைச்சும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது கண்துடைப்புக்காக நடத்தப்படும் தேர்தல் என்று எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ராணுவ ஆட்சியைச் சட்டபூர்வமாக நடத்துவதற்கு நடத்தப்படும் நாடகம்தான் தேர்தல் என்று குறை கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள், போராளிகள் உள்ளிட்ட பல குழுக்களால் மியன்மார் சிதைந்துள்ளது. சில பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களில் தேர்தல் நடக்காது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்