மலேசியாவுக்கு வருகை தரும் மியன்மார் அதிபர் மின் அங் ஹ்லியாங்

மலேசியாவுக்கு வருகை தரும் மியன்மார் அதிபர் மின் அங் ஹ்லியாங்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 4:44 pm

2 mins read

கோலாலம்பூர்: மியன்மாரின் ஜனநாயக ஆட்சியை 2021ல் கவிழ்த்த ராணுவ ஆட்சியினரின் தலைவராக இருந்து அண்மையில் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மின் அங் ஹ்லியாங் மலேசியாவுக்கு சில நாள்களில் வருகை தரவிருக்கிறார்.

மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஆயிரக்கணக்கான மியன்மார் மக்களை மீண்டும் நாடு திரும்பவைக்கும் நடவடிக்கையை மலேசியா தொடங்கியுள்ள நிலையில் இந்த வருகை இடம்பெறுகிறது.

அவரது வருகை குறித்து மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் விவரங்களை வெளியிட்டார்.

மலேசியாவில் வாழும் மியன்மார் மக்கள் குறித்து அந்நாட்டு அதிபர் வருகையின்போது விவாதிக்கப்படும். குடியேறிகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வுக்கான அந்தப் பேச்சுவார்த்தையில் உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் தாமும் கலந்துகொள்ளப்போவதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகும் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போருக்கு மத்தியிலும் மியன்மார் அதிபர் மேற்கொள்ளும் அரசதந்திர முக்கியத்துவம் வாய்ந்த வருகையாக அவரது மலேசிய வருகை பார்க்கப்படுகிறது.

துன்புறுத்தல், ஒடுக்குமுறை இன்றி, மனித உரிமைகளை மீறாமல், சொந்த நாட்டு மக்கள் முறையாக நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை மியன்மார் வழங்கிய பிறகுதான் அவர்கள் மலேசியாவை விட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள் என்றார் திரு அன்வார்.

“அதேநேரத்தில் நம் நாட்டிலிருந்து தங்களது சொந்தநாட்டுமக்களை மீட்டுக்கொள்ள விரும்பும் எந்த நாடாக இருந்தாலும் நாம் அதனை வரவேற்கிறோம்,” என்றார் பிரதமர் அன்வார்.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் அவர்களது சொந்த விருப்பப்படியே நாடுதிரும்ப ஒப்புதல் அளித்துள்ளதாக மலேசியா கூறுகிறது. இருப்பினும் அந்த மியன்மார் நாட்டவர்களின் இனத்தை மலேசியா குறிப்பிடவில்லை.

இதுவரையில் ஏறத்தாழ 10,000 மியன்மார் நாட்டுமக்கள் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்கள் என மியன்மார் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமியன்மார்அதிபர்அன்வார் இப்ராகிம்அன்வார்ரோஹிங்யாஅகதிநாடுகடத்தல்