யங்கூன்: மியன்மாரின் மேற்கு மாநிலமான ரக்கைனில் உள்ள மருத்துவமனையின்மீது தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை (டிசம்பர் 13) ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர். நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், பிள்ளைகள் உள்ளிட்டோர் அதில் மரணமடைந்தனர்.
அரசாங்கத்தின் ‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ எனும் நாளேட்டில் ராணுவத்தின் அறிக்கை இடம்பெற்றுள்ளது. பூர்வீக அராக்கன் ராணுவத்தினர், மக்கள் தற்காப்புப் படையினர், ஜனநாயக ஆதரவுப் போராளிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுவினர், மருத்துவமனையைத் தளமாய்ப் பயன்படுத்தியதாக மியன்மார் ராணுவம் தெரிவித்தது.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகே, மருத்துவமனையைக் குறிவைத்துப் பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தியதாக அது சொன்னது. தாக்குதலில் மாண்டவர்களும் காயமடைந்தவர்களும் எதிர்த்தரப்பின் ஆயுதந்தாங்கிய உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே என்றும் பொதுமக்கள் அல்லர் என்றும் ராணுவம் கூறியது.
தாக்குதலில் நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 80 பேர் காயமுற்றதாகவும் ரக்கைன் மாநிலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். புதன்கிழமை இரவு மியோவூ நகரில் உள்ள மருத்துவமனையின்மீது ராணுவ விமானம் இரண்டு குண்டுகளை வீசியது. அதில் மருத்துவமனைக் கட்டடம் முற்றிலும் சிதைந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியசுஸ் கூறியுள்ளார். ஒட்டுமொத்தச் சமூகத்தினருக்குமான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு அது இடையூறாய் அமையும் என்றார் அவர்.
2021ஆம் ஆண்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மாரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

