நேப்பிடோ: மியன்மார் ஆயுதப்படையின் வருடாந்தர அணிவகுப்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மியன்மார் ராணுவத் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாரின் முழு அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அந்நாட்டு ராணுவம், அதன் தலைமைத்துவ மாற்றம் குறித்துப் பகிரங்கமாக அறிவிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
அந்நாட்டின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் மார்ச் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடங்கும்.
தற்போதைய ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங், நீண்டகாலமாக அதிபர் பதவியின்மீது ஆர்வம் காட்டிவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 26ஆம் தேதி நடந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, மியன்மார் ராணுவத்தின் துணைத் தளபதி சோ வின், தலைமைத்துவ மாற்றம் குறித்துப் பேசினார்.
மேலும், தலைநகர் நேப்பிடோவில் நடைபெறும் பிரம்மாண்டமான ஆயுதப்படை தின அணிவகுப்பிற்குப் பிறகு இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்றார் அவர்.
“யார் தலைமை தாங்கினாலும், முந்தைய தலைவர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள் ஆகியோரின் வழிகாட்டுதல்களையும் நிலைநாட்டப்பட்ட ராணுவக் கொள்கைகளையும் மியன்மார் ராணுவம் தொடர்ந்து பின்பற்றும்,” என அச்சந்திப்பில் அவர் கூறியதாக ‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மியன்மாரில் பொதுத் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் தற்போது அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தேர்தல், முறைகேடுகள் நிறைந்தது என்றும் ஏமாற்று வேலை என்றும் பரவலாக விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், அதில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சியே வெற்றி பெற்றது.
இதன் மூலம், அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் ஹ்லைங் அந்நாட்டின் அதிபராவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மியன்மார் ராணுவம் தற்போது அந்நாட்டின் பல பகுதிகளில் ஆயுதமேந்திப் போராடும் குழுக்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில், உயர் தலைமைத்துவ மாற்றத்தை ராணுவம் முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிப்பது என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வன்று என அரசியல் ஆய்வாளர் திரு ஹ்டின் கியாவ் ஆயே தெரிவித்துள்ளார்.

