நேப்பிடோ: கடந்த 2017ஆம் ஆண்டு மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து சிறுபான்மை முஸ்லிம் சமூகமான ரொஹிங்யா மக்கள் நீக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் ரொஹிங்யா மக்களின் கிராமங்களையும் பள்ளிவாசல்களையும் அழித்து அவற்றைப் பாதுகாப்புக் கூடங்களாகப் பயன்படுத்தியது என்று ஐக்கிய நாட்டுச் சபையின் (ஐநா) ஆதரவுடன் நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த விசாரணையின் முடிவுகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளியிடப்பட்டன.
ரொஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரிதும் மோசமடைந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மியன்மார் ராணுவம் நடவடிக்கை எடுத்ததையடுத்து வன்முறை மோசமடைந்தது.
அதனைத் தொடர்ந்து கடற்கரை மாநிலமான ரக்கைனில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
தற்போது சுமார் 1.3 மில்லியன் ரொஹிங்யா அகதிகள் பங்ளாதேஷில், அளவுக்கதிகமானோர் இருக்கும் முகாம்களில் வசித்து வருகின்றனர். மியன்மார் ராணுவம் மேற்கொண்ட பதில் நடவடிக்கை, இனப் படுகொலையை எடுத்துக்காட்டும் முதன்மை உதாரணம் என்று ஐநா பின்னர் வகைப்படுத்தியது.
“மியன்மார் அதிகாரிகள் திட்டமிட்டு ரொஹிங்யா கிராமங்கள், பள்ளிவாசல்கள், இடுகாடுகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை அழித்தனர். ரொஹிங்யா மக்களின் நிலம் சார்ந்த உரிமைகள், அவர்கள் எத்தனை காலம் அந்நிலங்களில் இருக்கலாம் போன்ற தகவல்களை அதிகாரபூர்வ பதிவுகளின் மூலம் ராணுவத்தினர் அறிந்திருந்தனர்,” என்று மியன்மார் சுயேச்சை விசாரணை அமைப்பு (ஐஎம்எம்எம்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அழைப்புகளுக்கு மியன்மார் ராணுவத்தின் பேச்சாளர் பதிலளிக்கவில்லை. நேரடி சாட்சியங்கள், காணொளிப் பதிவுகள், அதிகாரபூர்வப் பதிவுகள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு அறிக்கை வரையப்பட்டதாக ஐஎம்எம்எம் தெரிவித்தது.
2017ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையின்போது ரொஹிங்யா மக்களுக்கு எதிராகத் தாங்கள் இனப் படுகொலையில் ஈடுபடவில்லை என்று மியன்மார் ராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது. எனினும், தனிநபர்களுக்கு எதிராகக் குற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.