யங்கூன்: மியன்மார் ராணுவம், இணைய மோசடிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 150 கட்டடங்களைத் தடைமட்டமாக்குவதாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கூறியுள்ளது.
தாய்லாந்துக்கு எல்லையில் உள்ள அந்தக் கட்டடங்களில் உடற்பயிற்சிக் கூடம், கராவோக்கே கூடம் ஆகியவற்றில் இணைய மோசடிகள் நடத்தப்பட்டன.
போரால் பிளவுபட்டுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் காதல் மோசடி, வர்த்தக மோசடி ஆகியவற்றைச் செயல்படுத்தும் ஊழியர்கள் கட்டடங்களில் தங்கியிருந்தனர். அவர்கள் ஆண்டுதோறும் பத்து பில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்தனர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்யும் பலர் பலவந்தமாக அங்குக் கடத்தப்பட்டிருந்தாலும் வேறு சிலர் அங்கு வேலைசெய்ய தாமாக முன்வந்தனர்.
அத்தகைய வளாகங்களில் ஆடம்பர வசதிகள் இருந்தன.
அக்டோபர் மாதம் மியன்மார் ராணுவம், பிரபல மோசடி நிலையமான கேகே பூங்காவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதில் 2,000க்கும் அதிகமான மோசடிக்காரர்கள் சிக்கினர்; 1,500க்கும் அதிகமானோர் தாய்லாந்துக்குள் தப்பி ஓடினர்.
ஊழியர்களுக்கான தங்குமிடங்கள், நான்கு மாடி மருத்துவமனை, இரண்டு மாடி கராவோக்கே வளாகம் ஆகியவற்றில் மோசடிக் கும்பல் செயல்பட்டதை மியன்மார் ராணுவம் கண்டுபிடித்ததாக ‘த குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ நாளேடு சொன்னது.
அவற்றுள் 101 கட்டடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன என்றும் எஞ்சிய 47 கட்டடங்களை இடிக்கும் பணிகள் நடப்பில் உள்ளன என்றும் நாளேடு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரிலும் தாய்லாந்தின் எல்லைப் பகுதியிலும் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அவ்வப்போது பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகக் கூறினர்.
எனினும், மோசடி நிலையங்களை முடக்கும்படி வலுத்துவரும் அனைத்துலக நெருக்கடியைச் சமாளிக்கவே மியன்மார் ராணுவம் மேம்போக்காக அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நிபுணர்கள் கூறினர்.
அத்தகைய மோசடி நிலையங்கள்மீது மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் மியன்மார் ராணுவம் சார்ந்திருக்கும் குடிப் படைகளின் லாபம் குறைந்துவிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மியன்மார் ராணுவத்தின் மிகப் பெரிய பக்கபலம் சீனா. சீன மக்களைக் குறிவைக்கும் கடுமையான மோசடிச் சம்பவங்களால் சீனா சினமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில் சீனா கொடுத்த அழுத்தம் காரணமாக மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களிலிருந்து ஏறக்குறைய 7,000 ஊழியர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

