யங்கூன்: மியன்மார் அதிபர் மின் ஆங் ஹிலைன், லாவோசுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை அவர் அங்குச் சென்றுசேர்ந்தார்.
குடிமைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஆசியான் நாடு ஒன்றுக்கு அவர் சென்றிருப்பது இதுவே முதன்முறை.
2021ஆம் ஆண்டு திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியை அவர் கைப்பற்றினார். நாட்டில் பத்தாண்டுக்கும் மேல் நிலவிய ஜனநாயகத்தைத் திரு மின் ஆங் ஹிலைங் முடிவுக்குக் கொண்டுவந்தார். பின்னர் மியன்மாரில் உள்நாட்டுப் போர் மூண்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு ராணுவத் தலைவராக ஆட்சி செய்த அவர் இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானார். தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகக் குறைகூறப்பட்டது.
மியன்மார் அதிபர் அவரின் துணைவியாரோடு லாவோஸ் சென்றிருப்பது, அதிபர் தகவல் குழு வெளியிட்ட படங்களில் தெரியவந்துள்ளது.
லாவோஸ் அதிபர் தொங்லூன் சிசொலித்தையும் பிரதமர் சோன்சாய் சிப்பாண்டானையும் திரு மின் ஆங் ஹிலைன் சந்திப்பார் என்று இவ்வாரத் தொடக்கத்தில் மியன்மார் அதிபரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
லாவோசுடன் தற்போதுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்த அதிபர் வெளிப்படையான முறையில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

